“விபசார ஒழிப்புச் சட்டம் விபசாரிகளை மட்டும் தண்டிக்கிறது. கொழுப்பெடுத்துப் போய் அவர்களிடம் செல்லும் வாடிக்கையாளர்களை மட்டும் விட்டு விடுகிறது.
.................................. நான் இப்போது வைக்கும் இன்னொரு கேள்வி. இச்சட்டம் பால் அடிப்படையில் பாகுபாடு (sexual discrimaination) செய்து பெண்ணை மட்டும் தண்டிக்கிறது. இது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. ஆகவே இச்சட்டமே செல்லாது. இவ்வாறு யாராவது ரிட் பேட்டிஷன் போட்டால் வெற்றி பெருமா?”
முதலிலேயே சொல்லி விடுகிறேன். விபச்சாரம் என்பது இந்தியாவின் எந்தச் சட்டத்திலும் குற்றம் என்று சொல்லப்படவில்லை. ஒரு ஆணும் பெண்ணும் தாங்களாகவே இசைந்து உறவு கொள்ளும் பட்சத்தில் எந்தவித குற்றமும் இல்லை. னால் சிறிது கவனம் தேவை. ஏனெனில் பெண்ணுக்கு பதினாறு வயதுக்கு குறைவான பட்சத்தில், பெண்ணின் இசைவு இருந்தாலும் அது பாலியல் பலாத்கார குற்றமாகும்.
சரி, விபச்சாரம் என்பது, 'ஒரு பெண் பணத்திற்காக அல்லது பொருட்களுக்காக உடலுறவுக்கு இசைவது' இதுவும் குற்றமல்ல. குற்றம் எங்கு வருகிறது என்று சொல்வதற்கு முன்னர் ஒரு சிறு குறிப்பு. விபச்சாரத்தின் மூலம் சம்பாதித்த பணம் வருமான வரிக்கு உட்பட்டது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவின் ஒரு விபச்சார விடுதி பங்குச் சந்தையில் ஈடுபட்டு பணம் முதலீட்ட அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஆஸ்திரேலிய விவகாரம் இந்தியாவில் சாத்தியமல்ல. ஏனெனில் விபச்சார விடுதி நடத்துவது என்பது இங்கு குற்றமாகிறது. இந்திய குற்றவியல் சட்டம் (Indian Penal Code'1860) என்ற குற்றங்களையும் அவற்றிற்கான தண்டனைகளையும் வரையறுக்கும் ஒரு சட்டம் இருப்பது அனைவரும் அறிந்தது. இந்தச் சட்டம் 1860ம் ண்டு இயற்றப்பட்ட சட்டமாதலால், அதன் பின் பெருகிப் பரவியுள்ள புதியவகை குற்றங்களுக்கு என தனிப்பட்ட சட்டங்கள் இயற்றப்படுதல் அவசியமாகிறது.
உதாரணமாக போதைப் பொருட்களின் வீச்சமும், பயங்கரவாத செயல்களும் அறியப்படாத காலம் அது. எனவேதான், செய்தித்தாள்களில் அடிபடும் ‘கமிஷனர் கருப்பன் புகழ் எண்டிபிஎஸ், தடா, பொடாவெல்லாம் இந்திய தண்டனைச் சட்டத்தில் இல்லாமல் தனியாக புழங்குகிறது. விபச்சாரமும் சமுகத்தால் அங்கீகரிக்கப்பட்டு ஒரு வாழ்க்கை முறையாகவே பழங்காலத்தில் கருதப்பட்டது. வாழ்க்கை முறையாக மட்டுமேயிருந்த விபச்சாரம், பின்னாளில் பெரும் வியாபாரமாக, பல நாடுகளும் சம்பந்தப்பட்ட பெண்களுக்கு எதிரான மிகப்பெரிய சுரண்டலாக உருவெடுத்த காரணத்தால்ல் அதனை தடுக்கும் பொருட்டு அமெரிக்காவில் 1950ம் வருடம் ஒரு பன்னாட்டு மாநாடு நடைபெற்றது. அந்த மநாட்டில் கையெழுத்திடப்பட்ட ஒப்புதலின் அடிப்படையில் இந்தியாவில் 1956ம் ஆண்டு இவ்வாறு பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி சுரண்டுவதை (trafficking) தடுக்கும் எண்ணத்துடன் நிறைவேற்றப்பட்ட சட்டம்தான் The Suppression of Immoral Traffic Act'1956.
எஸைடி சட்டம் என்று நீதிமன்றங்களில் அழைக்கப்படும் இந்தச் சட்டத்தில் விபச்சாரம் என்பது குற்றமல்ல. ஆனால் விபச்சார விடுதி நடத்துவது, அதற்கு உதவி செய்வது குற்றம். வீட்டினை தெரியாத நபர்களிடம் வாடகைக்கு விடுகையில் சிறிது கவனம் தேவை. அதுவும் நல்ல வாடகையென ஆசை காட்டும் தரகரை நம்பி இங்கே வீட்டை வாடகைக்கு விட்டு வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு இந்த ஆபத்துக்கு நிகழ வாய்ப்பு அதிகம்.
சரி, எது விபச்சார விடுதியாகிறது? எந்த ஒரு பகுதியும் விபச்சாரத்துக்கு பயன்படுத்தப்பட்டு அந்த விபச்சாரத்தின் பலன் வேறு நபருக்கோ அல்லது ஒன்றுக்கு மேலான விபச்சாரிகள் தங்களுக்கிடையே பலனடைந்தலோ அது விபச்சார விடுதியாகிறது. புரிகிறதா? அதாவது ஒரு பெண் வேறு யாருடைய துணையுமின்றி தனியாக தங்கியிருந்து விபச்சாரத்தில் ஈடுபட்டால் அது விபச்சார விடுதியாகாது. அப்படி செய்வதில் குற்றமுமில்லை. ஆனால் இரு பெண்கள் தங்கியிருந்து தங்களுடைய வருமானத்தைப் பகிர்ந்து கொண்டால் அது குற்றமாகிறது. மேலும் ஒரு விபச்சாரியை அண்டி அவர் விபச்சாரம் மூலம் சம்பாதிக்கும் பணத்தில் வாழும் நபர், பதினெட்டு வயது நிரம்பியர் என்றால் அதுவே ஒரு குற்றமாகிறது. இதில் மகன், மகள் கூட அடக்கம்.
இதிலிருந்தே இந்தச் சட்டத்தின் நோக்கம் விபச்சாரத்தை தடுப்பதல்ல மறாக விபச்சாரம் செய்பவரைத் தவிர வேறு நபர்கள் பலனடைவதை தடுப்பதே என்பதை அறியலாம். எனவே நமது பத்திரிக்கைகள் 'விபச்சாரத் தடை சட்டம்' என்று குறிப்பிடுவதே தவறான பதமாகும். ஆங்கில பெயர் அப்படி அர்த்தம் கொள்ளவே கொள்ளாது.
எனவே இங்கு பணமளிக்கும் நபர் எந்தவித குற்றமும் செய்யவில்லை. எனவேதான் ஆணுக்கு தண்டனையில்லை. ஆனால் அவரும் ஒரு சந்தர்ப்பத்தில் குற்றவாளியாக முடியும். அதாவது, விபச்சாரம் நடைபெற்ற இடம் கோவில், கல்விக்கூடம், விடுதி, மருத்துவச்சாலை போன்றவற்றிற்கு 200 மீட்டர் சுற்றளவுக்குள் இருக்கையில் இரண்டு நபர்களும் குற்றவாளியாகின்றனர்.
இதில் ஒரு வேடிக்கை. திரைப்படங்களில் வில்லன்களை கைது செய்வது வரைதான் காண்பிக்க முடியும். அவர்கள் செய்த குற்றங்களை நீதிமன்றத்தில் நிரூபிப்பது என்பது பெரிய தலைவலி! விபச்சாரம் நடந்ததற்கு சாட்சிக்கு என்ன செய்வது. காவலர்களே கஸ்டமர்களை ஏற்பாடு செய்ய வேண்டியதுதான். அப்படிப் போன கஸ்டமர் மீது ஒரு சென்னை நீதிபதி என்ன பொறாமையாலோ ஏகக் கடுப்பாகி, 'நீயும்தான்ன் தவறு செய்திருக்கிறாய். போ! சாட்சிக்கூண்டிலிருந்து குற்றவாளிக்கூண்டுக்கு' என்று விட்டார். பின்னர் மனிதர் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி வெளியே வரவேண்டியதாகிவிட்டது (1972 MadLW (Cri) 211).
காவலர் புலன் விசாரணையை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு இந்த 'போலி கஸ்டமர்க'ளே போலி என்பது புரியும். உண்மையான கஸ்டமர்களை சாட்சித் தேவைக்காக இப்படி போலியாக்குவது உண்டு. இரண்டாவது உண்மையான கஸ்டமர்களை விட்டு....காவலர் கவனிப்பில் இருக்கும் நபர்களை போலிச்சாட்சியாக்குவதும் உண்டு.
விபச்சார விடுதியில் இப்படி ஆயிரம் பிரச்னைகள் இருக்க காவலர்கள் தினசரி எப்படி அநேகரை விபச்சார குற்றத்திற்காக நீதிமன்றம் கொண்டு வருகிறார்கள்? இருக்கவே இருக்கு இன்னும் ஒரு குற்றம். யாராவது பொது இடத்தில் ஒரு நபரை விபச்சாரத்திற்காக கண் ஜாடையில் அழைத்தால் கூட அது ஒரு குற்றம். கவனிக்கவும் இங்கும் ண் குற்றவாளியல்ல.
காவலர் யாராவது உங்களுக்கு நண்பராக இருக்கும் பட்சத்தில் அவர்கள் தினமும் எழுதிக் குவிக்கும் முதல் தகவல் அறிக்கையை (FIR) பாருங்கள். எல்லாவற்றிலும் ஒரே வாசகம்தான் இருக்கும், "நான் பஸ்ஸ¥க்காக நின்று கொண்டிருந்தேன். அப்போது பார்த்தால் அடையாளம் காட்டக் கூடிய பெண் என் அருகே வந்து, 'வருகிறாயா ஜாலியாக இருக்கலாம்' என்று அழைத்தாள். நான் உட்னே அங்கிருந்த காவலரிடம் புகார் செய்தேன்" இதற்கு மேல் வசனம் கண்டுபிடிக்க அவர்களது கற்பனை வளம் இடம் கொடுக்காது. அந்த "நான்" பெரும்பாலும் ஏற்கனவே பார்த்த காவலர்களின் கவனிப்பில் இருக்கும் நபர்கள்.
இது தவிர விபச்சார விடுதிகளில் விருப்பத்துக்கு மாறாக இருக்கும் பெண்கள், சிறுமிகள் (21 வயதுக்கு குறைவானவர்கள்) ஆகியோரை மீட்க தனி நடைமுறைகள் இருக்கின்றன. நீங்கள் யாருக்காவது உதவ விரும்பினால் சம்பந்தப்பட்ட மாஜிஸ்டிரேட்டிடம் ஒரு மனு கொடுங்கள் போதும். ஆனால், மும்பையில் மிகப் பிரபலமான ஜி..ஆர்.கெய்ர்னார் போன்றவர்களே இதில் ஆர்வமாக ஈடுபட்டு அதிக பலனின்றி சோர்ந்து விட்டனர். விபச்சார விடுதிகள் சமுதாயம் முழுமைக்கான பிரச்னை....இதில் சட்டம் என்ன சாதித்து விடும் என்பது புரியவில்லை
this is very nice and infor5mative
ReplyDelete