Tuesday, 23 August 2011

முடங்கும் தகவல் அறியும் உரிமை சட்டம்

கடுமையான விதிகளை அமல்படுத்த யோசனை:
முடங்கும் தகவல் அறியும் உரிமை சட்டம்?

தகவல் அறியும் உரிமை சட்டம் 2005&ல் கொண்டு வரப்பட்ட பிறகுதான் மறைமுகமாக நடந்து கொண்டிருந்த அரசு நிர்வாகம், கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படையானது. பல்வேறு வழிகளிலும் மக்கள் பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டிருந்த அரசியல்வாதிகள், அதிகாரிகள் இதனால் தடுமாறித்தான் போனார்கள்.

‘‘யாராவது நாளைக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விவரங்களைக் கேட்டுப் பெற்று வம்பு பண்ணினால், பின்னாளில் சிக்கல் வரும்...’’ என்று சொல்லி ஒதுங்க ஆரம்பித்தார்கள்.

லேட்டஸ்டாக, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் வீடு, நிலம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகளையெல்லாம் சமூக ஆர்வலர்கள் அம்பலபடுத்தியது தகவல் அறியும் உரிமை சட்டத்தால்தான். இதேபோல் பல ஊழல்களை வெளிச்சம் போட்டுக் காட்ட பயன்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை திருத்தம் என்ற பெயரில் சீர்குலைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது மத்திய அரசு.

தவறு செய்யும் அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு இனிப்பான இந்த செய்தி... ஊழல்களை அம்பலப்படுத்தும் சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

இது தொடர்பாக டெல்லி அரசு அதிகாரிகள் சிலரிடம் பேசியபோது, ‘‘‘தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நிலுவையில் இருக்கும் வழக்கு விவரங்களைக் கொடுக்க முடியாது. நாட்டின் இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் அவசியமான விவரங்களை வெளியிட வாய்ப்பில்லை என்று ஏற்கனவே சில வரம்புகள் உள்ளன. இந்நிலையில், சட்டத்திருத்தம் கொண்டுவந்தால் இனி அரசுத் தரப்பிடமிருந்து அவ்வளவு எளிதாகத் தகவல்களைப் பெற முடியாது.

இப்போதைய தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கேட்பவர் ஒரு மனுவின் மூலம் எவ்வளவு விவரங்களை வேண்டுமானாலும் கேட்கலாம். ஆனால், இனிமேல் அப்படி கேட்க முடியாது. ஒரு மனுவில் ஒரு கேள்வி மூலமாக ஒரு விவரத்தை மட்டுமே கேட்டுப் பெற முடியும்.

தகவல் பெறுவதற்காக அனுப்பப்படும் மனுவில் அனுப்புனர், பெறுனர் விவரங்கள் தவிர்த்து, கேட்கப்படும் விவரங்கள் 250 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். கேட்கப்படும் விவரம் முழுவதும் ஒரே பொருளின் கீழ் இருக்க வேண்டும். இப்படி நிறைய மாற்றங்களோடு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வர, மத்திய அரசு யோசித்துவருகிறது’’ என்று சொன்னார்கள்.

இதுபற்றி வழக்கறிஞர் ந.ராஜா செந்தூர் பாண்டியனிடம் கேட்டபோது, ‘‘தகவல் அறியும் உரிமை சட்டம், ஜனநாயக நாட்டுக்கு அவசியமான சட்டம். அரசாங்க நடைமுறைகள் வெளிப்படையானது என்பதை உணர்த்தும் விதமாக அமைந்த சட்டம். இந்த சட்டத்தை எல்லோரும் பரவலாக பயன்படுத்த ஆரம்பித்ததும், அரசு நிர்வாகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தவறுகள் குறைய ஆரம்பித்தன. அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் பயம் ஏற்பட்டது. அரசியல்வாதிகள் தவறுக்கு நிர்ப்பந்தப்படுத்தினாலும், அதிகாரிகள் உடன்பட மறுத்தார்கள். இந்த சூழலில்தான், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப் போவதாக அறிகிறோம்.

ஒரு மனுவில் ஒரு கேள்விதான் கேட்க முடியுமென்றால், விவரங்களை முழுவதுமாகப் பெறுவதற்கு நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கும். நீதிமன்ற ஸ்டாம்ப், விரைவு அஞ்சல் செலவு, டைப்பிங் செலவு என கூடுதலாக செலவு செய்யும்போது, அதற்கு வழியில்லாமல் தகவல் கேட்பவர்கள் மெல்ல ஒதுங்கிக் கொள்வார்கள் என்பதாலேயே இப்படியொரு சட்டத்திருத்தம் கொண்டுவர முடிவு செய்திருக்கிறார்கள்.

உதாரணமாக, ஒரு விண்ணப்பத்தின் மூலம் ஒருவர் ஐந்து பொருளின் கீழ் விவரம் கேட்டுக் கொண்டிருந்ததெல்லாம் இனி முடியாது. இப்போது ஒருவர் ஒரு மனுவுக்கு இருபத்தைந்து ரூபாய் செலவு செய்து விவரங்களைப் பெற்றுவிட முடியும். இனிமேல் இருநூறு ரூபாய்க்கும் அதிகமாக செலவு செய்ய வேண்டியிருக்கும்.

அதேபோல, இனிமேல் ஆவணங்களைத் தேடுவதற்கு காலத்துக்கேற்ப கட்டணம் நிர்ணயிக்கப் போகிறார்களாம். அதாவது, ஆவணத்தைத் தன் கையிலேயே வைத்துக் கொண்டு, தேடுதல் கட்டணமாக இனிமேல் ஒவ்வொரு தகவலுக்கும் ரூபாய் ஐநூறு கட்டணம் கட்டு என்றால், ஏழைகள் எங்கே போக முடியும்? மொத்தத்தில், தகவல் அறியும் உரிமை சட்டத்தை ஏழைகளும் பயன்படுத்த முடியாத சட்டமாக்க முயற்சிகள் நடக்கிறது.

தவிரவும், இதே தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், அரசு செய்யும் தவறுகள் அனைத்தையும் ஆதாரமாக பெற்று வெளிச்சம் போட்டுக் கொண்டிருந்தார்கள் பத்திரிகையாளர்கள் பலரும். அவர்களையும் இந்த சட்டத்திருத்த முயற்சி மூலம் முடக்கிப் போட வேண்டும் என்பதுதான், அரசியல்வாதிகளின் எண்ணம்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தை 2005-ல் கொண்டு வந்தபோது, அதில் ஏதேனும் மாற்றங்கள் என்றால், இரண்டாண்டுகளுக்குள் செய்து முடிக்கவேண்டும் என்று சட்ட விதிகளில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனாலும், ஐந்தாண்டுகளுக்குப் பிறகு சட்டத்திருத்தம் கொண்டுவர முயற்சிக்கிறார்கள்.

மொத்தத்தில், அரசின் தவறுகள் வெளியே வரக் கூடாது என்பதற்காக கொண்டுவரப்படவிருக்கும் இந்த சட்டத் திருத்தத்தை நிறுத்த வேண்டும். இதற்கு மக்கள்தான் பெரும் சக்தியாக கிளர்ந்து எழ வேண்டும்...’’ என்றார்.

திருத்தம் என்ற பெயரில் தகவல் அறியும் உரிமை சட்டத்தை தீர்த்துக் கட்டப் பார்க்கிறது மத்திய அரசு. மனித உரிமை ஆர்வலர்கள் இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள்?

No comments:

Post a Comment