Wednesday, 24 August 2011

விபசார ஒழிப்புச் சட்டம் விபசாரிகளை மட்டும் தண்டிக்கிறது

விபசார ஒழிப்புச் சட்டம் விபசாரிகளை மட்டும் தண்டிக்கிறது. கொழுப்பெடுத்துப் போய் அவர்களிடம் செல்லும் வாடிக்கையாளர்களை மட்டும் விட்டு விடுகிறது.
.................................. நான் இப்போது வைக்கும் இன்னொரு கேள்வி. இச்சட்டம் பால் அடிப்படையில் பாகுபாடு (sexual discrimaination) செய்து பெண்ணை மட்டும் தண்டிக்கிறது. இது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. ஆகவே இச்சட்டமே செல்லாது. இவ்வாறு யாராவது ரிட் பேட்டிஷன் போட்டால் வெற்றி பெருமா?

முதலிலேயே சொல்லி விடுகிறேன். விபச்சாரம் என்பது இந்தியாவின் எந்தச் சட்டத்திலும் குற்றம் என்று சொல்லப்படவில்லை. ஒரு ஆணும் பெண்ணும் தாங்களாகவே இசைந்து உறவு கொள்ளும் பட்சத்தில் எந்தவித குற்றமும் இல்லை. னால் சிறிது கவனம் தேவை. ஏனெனில் பெண்ணுக்கு பதினாறு வயதுக்கு குறைவான பட்சத்தில், பெண்ணின் இசைவு இருந்தாலும் அது பாலியல் பலாத்கார குற்றமாகும்.
சரி, விபச்சாரம் என்பது, 'ஒரு பெண் பணத்திற்காக அல்லது பொருட்களுக்காக உடலுறவுக்கு இசைவது' இதுவும் குற்றமல்ல. குற்றம் எங்கு வருகிறது என்று சொல்வதற்கு முன்னர் ஒரு சிறு குறிப்பு. விபச்சாரத்தின் மூலம் சம்பாதித்த பணம் வருமான வரிக்கு உட்பட்டது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவின் ஒரு விபச்சார விடுதி பங்குச் சந்தையில் ஈடுபட்டு பணம் முதலீட்ட அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஆஸ்திரேலிய விவகாரம் இந்தியாவில் சாத்தியமல்ல. ஏனெனில் விபச்சார விடுதி நடத்துவது என்பது இங்கு குற்றமாகிறது. இந்திய குற்றவியல் சட்டம் (Indian Penal Code'1860) என்ற குற்றங்களையும் அவற்றிற்கான தண்டனைகளையும் வரையறுக்கும் ஒரு சட்டம் இருப்பது அனைவரும் அறிந்தது. இந்தச் சட்டம் 1860ம் ண்டு இயற்றப்பட்ட சட்டமாதலால், அதன் பின் பெருகிப் பரவியுள்ள புதியவகை குற்றங்களுக்கு என தனிப்பட்ட சட்டங்கள் இயற்றப்படுதல் அவசியமாகிறது.

உதாரணமாக போதைப் பொருட்களின் வீச்சமும், பயங்கரவாத செயல்களும் அறியப்படாத காலம் அது. எனவேதான், செய்தித்தாள்களில் அடிபடும் ‘கமிஷனர் கருப்பன் புகழ் எண்டிபிஎஸ், தடா, பொடாவெல்லாம் இந்திய தண்டனைச் சட்டத்தில் இல்லாமல் தனியாக புழங்குகிறது. விபச்சாரமும் சமுகத்தால் அங்கீகரிக்கப்பட்டு ஒரு வாழ்க்கை முறையாகவே பழங்காலத்தில் கருதப்பட்டது. வாழ்க்கை முறையாக மட்டுமேயிருந்த விபச்சாரம், பின்னாளில் பெரும் வியாபாரமாக, பல நாடுகளும் சம்பந்தப்பட்ட பெண்களுக்கு எதிரான மிகப்பெரிய சுரண்டலாக உருவெடுத்த காரணத்தால்ல் அதனை தடுக்கும் பொருட்டு அமெரிக்காவில் 1950ம் வருடம் ஒரு பன்னாட்டு மாநாடு நடைபெற்றது. அந்த மநாட்டில் கையெழுத்திடப்பட்ட ஒப்புதலின் அடிப்படையில் இந்தியாவில் 1956ம் ஆண்டு இவ்வாறு பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி சுரண்டுவதை (trafficking) தடுக்கும் எண்ணத்துடன் நிறைவேற்றப்பட்ட சட்டம்தான் The Suppression of Immoral Traffic Act'1956.

எஸைடி சட்டம் என்று நீதிமன்றங்களில் அழைக்கப்படும் இந்தச் சட்டத்தில் விபச்சாரம் என்பது குற்றமல்ல. ஆனால் விபச்சார விடுதி நடத்துவது, அதற்கு உதவி செய்வது குற்றம். வீட்டினை தெரியாத நபர்களிடம் வாடகைக்கு விடுகையில் சிறிது கவனம் தேவை. அதுவும் நல்ல வாடகையென ஆசை காட்டும் தரகரை நம்பி இங்கே வீட்டை வாடகைக்கு விட்டு வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு இந்த ஆபத்துக்கு நிகழ வாய்ப்பு அதிகம்.

சரி, எது விபச்சார விடுதியாகிறது? எந்த ஒரு பகுதியும் விபச்சாரத்துக்கு பயன்படுத்தப்பட்டு அந்த விபச்சாரத்தின் பலன் வேறு நபருக்கோ அல்லது ஒன்றுக்கு மேலான விபச்சாரிகள் தங்களுக்கிடையே பலனடைந்தலோ அது விபச்சார விடுதியாகிறது. புரிகிறதா? அதாவது ஒரு பெண் வேறு யாருடைய துணையுமின்றி தனியாக தங்கியிருந்து விபச்சாரத்தில் ஈடுபட்டால் அது விபச்சார விடுதியாகாது. அப்படி செய்வதில் குற்றமுமில்லை. ஆனால் இரு பெண்கள் தங்கியிருந்து தங்களுடைய வருமானத்தைப் பகிர்ந்து கொண்டால் அது குற்றமாகிறது. மேலும் ஒரு விபச்சாரியை அண்டி அவர் விபச்சாரம் மூலம் சம்பாதிக்கும் பணத்தில் வாழும் நபர், பதினெட்டு வயது நிரம்பியர் என்றால் அதுவே ஒரு குற்றமாகிறது. இதில் மகன், மகள் கூட அடக்கம்.

இதிலிருந்தே இந்தச் சட்டத்தின் நோக்கம் விபச்சாரத்தை தடுப்பதல்ல மறாக விபச்சாரம் செய்பவரைத் தவிர வேறு நபர்கள் பலனடைவதை தடுப்பதே என்பதை அறியலாம். எனவே நமது பத்திரிக்கைகள் 'விபச்சாரத் தடை சட்டம்' என்று குறிப்பிடுவதே தவறான பதமாகும். ஆங்கில பெயர் அப்படி அர்த்தம் கொள்ளவே கொள்ளாது.

எனவே இங்கு பணமளிக்கும் நபர் எந்தவித குற்றமும் செய்யவில்லை. எனவேதான் ஆணுக்கு தண்டனையில்லை. ஆனால் அவரும் ஒரு சந்தர்ப்பத்தில் குற்றவாளியாக முடியும். அதாவது, விபச்சாரம் நடைபெற்ற இடம் கோவில், கல்விக்கூடம், விடுதி, மருத்துவச்சாலை போன்றவற்றிற்கு 200 மீட்டர் சுற்றளவுக்குள் இருக்கையில் இரண்டு நபர்களும் குற்றவாளியாகின்றனர்.

இதில் ஒரு வேடிக்கை. திரைப்படங்களில் வில்லன்களை கைது செய்வது வரைதான் காண்பிக்க முடியும். அவர்கள் செய்த குற்றங்களை நீதிமன்றத்தில் நிரூபிப்பது என்பது பெரிய தலைவலி! விபச்சாரம் நடந்ததற்கு சாட்சிக்கு என்ன செய்வது. காவலர்களே கஸ்டமர்களை ஏற்பாடு செய்ய வேண்டியதுதான். அப்படிப் போன கஸ்டமர் மீது ஒரு சென்னை நீதிபதி என்ன பொறாமையாலோ ஏகக் கடுப்பாகி, 'நீயும்தான்ன் தவறு செய்திருக்கிறாய். போ! சாட்சிக்கூண்டிலிருந்து குற்றவாளிக்கூண்டுக்கு' என்று விட்டார். பின்னர் மனிதர் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி வெளியே வரவேண்டியதாகிவிட்டது (1972 MadLW (Cri) 211).

காவலர் புலன் விசாரணையை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு இந்த 'போலி கஸ்டமர்க'ளே போலி என்பது புரியும். உண்மையான கஸ்டமர்களை சாட்சித் தேவைக்காக இப்படி போலியாக்குவது உண்டு. இரண்டாவது உண்மையான கஸ்டமர்களை விட்டு....காவலர் கவனிப்பில் இருக்கும் நபர்களை போலிச்சாட்சியாக்குவதும் உண்டு.

விபச்சார விடுதியில் இப்படி ஆயிரம் பிரச்னைகள் இருக்க காவலர்கள் தினசரி எப்படி அநேகரை விபச்சார குற்றத்திற்காக நீதிமன்றம் கொண்டு வருகிறார்கள்? இருக்கவே இருக்கு இன்னும் ஒரு குற்றம். யாராவது பொது இடத்தில் ஒரு நபரை விபச்சாரத்திற்காக கண் ஜாடையில் அழைத்தால் கூட அது ஒரு குற்றம். கவனிக்கவும் இங்கும் ண் குற்றவாளியல்ல.

காவலர் யாராவது உங்களுக்கு நண்பராக இருக்கும் பட்சத்தில் அவர்கள் தினமும் எழுதிக் குவிக்கும் முதல் தகவல் அறிக்கையை (FIR) பாருங்கள். எல்லாவற்றிலும் ஒரே வாசகம்தான் இருக்கும், "நான் பஸ்ஸ¥க்காக நின்று கொண்டிருந்தேன். அப்போது பார்த்தால் அடையாளம் காட்டக் கூடிய பெண் என் அருகே வந்து, 'வருகிறாயா ஜாலியாக இருக்கலாம்' என்று அழைத்தாள். நான் உட்னே அங்கிருந்த காவலரிடம் புகார் செய்தேன்" இதற்கு மேல் வசனம் கண்டுபிடிக்க அவர்களது கற்பனை வளம் இடம் கொடுக்காது. அந்த "நான்" பெரும்பாலும் ஏற்கனவே பார்த்த காவலர்களின் கவனிப்பில் இருக்கும் நபர்கள்.

இது தவிர விபச்சார விடுதிகளில் விருப்பத்துக்கு மாறாக இருக்கும் பெண்கள், சிறுமிகள் (21 வயதுக்கு குறைவானவர்கள்) ஆகியோரை மீட்க தனி நடைமுறைகள் இருக்கின்றன. நீங்கள் யாருக்காவது உதவ விரும்பினால் சம்பந்தப்பட்ட மாஜிஸ்டிரேட்டிடம் ஒரு மனு கொடுங்கள் போதும். ஆனால், மும்பையில் மிகப் பிரபலமான ஜி..ஆர்.கெய்ர்னார் போன்றவர்களே இதில் ஆர்வமாக ஈடுபட்டு அதிக பலனின்றி சோர்ந்து விட்டனர். விபச்சார விடுதிகள் சமுதாயம் முழுமைக்கான பிரச்னை....இதில் சட்டம் என்ன சாதித்து விடும் என்பது புரியவில்லை






Tuesday, 23 August 2011

முடங்கும் தகவல் அறியும் உரிமை சட்டம்

கடுமையான விதிகளை அமல்படுத்த யோசனை:
முடங்கும் தகவல் அறியும் உரிமை சட்டம்?

தகவல் அறியும் உரிமை சட்டம் 2005&ல் கொண்டு வரப்பட்ட பிறகுதான் மறைமுகமாக நடந்து கொண்டிருந்த அரசு நிர்வாகம், கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படையானது. பல்வேறு வழிகளிலும் மக்கள் பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டிருந்த அரசியல்வாதிகள், அதிகாரிகள் இதனால் தடுமாறித்தான் போனார்கள்.

‘‘யாராவது நாளைக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விவரங்களைக் கேட்டுப் பெற்று வம்பு பண்ணினால், பின்னாளில் சிக்கல் வரும்...’’ என்று சொல்லி ஒதுங்க ஆரம்பித்தார்கள்.

லேட்டஸ்டாக, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் வீடு, நிலம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகளையெல்லாம் சமூக ஆர்வலர்கள் அம்பலபடுத்தியது தகவல் அறியும் உரிமை சட்டத்தால்தான். இதேபோல் பல ஊழல்களை வெளிச்சம் போட்டுக் காட்ட பயன்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை திருத்தம் என்ற பெயரில் சீர்குலைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது மத்திய அரசு.

தவறு செய்யும் அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு இனிப்பான இந்த செய்தி... ஊழல்களை அம்பலப்படுத்தும் சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

இது தொடர்பாக டெல்லி அரசு அதிகாரிகள் சிலரிடம் பேசியபோது, ‘‘‘தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நிலுவையில் இருக்கும் வழக்கு விவரங்களைக் கொடுக்க முடியாது. நாட்டின் இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் அவசியமான விவரங்களை வெளியிட வாய்ப்பில்லை என்று ஏற்கனவே சில வரம்புகள் உள்ளன. இந்நிலையில், சட்டத்திருத்தம் கொண்டுவந்தால் இனி அரசுத் தரப்பிடமிருந்து அவ்வளவு எளிதாகத் தகவல்களைப் பெற முடியாது.

இப்போதைய தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கேட்பவர் ஒரு மனுவின் மூலம் எவ்வளவு விவரங்களை வேண்டுமானாலும் கேட்கலாம். ஆனால், இனிமேல் அப்படி கேட்க முடியாது. ஒரு மனுவில் ஒரு கேள்வி மூலமாக ஒரு விவரத்தை மட்டுமே கேட்டுப் பெற முடியும்.

தகவல் பெறுவதற்காக அனுப்பப்படும் மனுவில் அனுப்புனர், பெறுனர் விவரங்கள் தவிர்த்து, கேட்கப்படும் விவரங்கள் 250 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். கேட்கப்படும் விவரம் முழுவதும் ஒரே பொருளின் கீழ் இருக்க வேண்டும். இப்படி நிறைய மாற்றங்களோடு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வர, மத்திய அரசு யோசித்துவருகிறது’’ என்று சொன்னார்கள்.

இதுபற்றி வழக்கறிஞர் ந.ராஜா செந்தூர் பாண்டியனிடம் கேட்டபோது, ‘‘தகவல் அறியும் உரிமை சட்டம், ஜனநாயக நாட்டுக்கு அவசியமான சட்டம். அரசாங்க நடைமுறைகள் வெளிப்படையானது என்பதை உணர்த்தும் விதமாக அமைந்த சட்டம். இந்த சட்டத்தை எல்லோரும் பரவலாக பயன்படுத்த ஆரம்பித்ததும், அரசு நிர்வாகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தவறுகள் குறைய ஆரம்பித்தன. அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் பயம் ஏற்பட்டது. அரசியல்வாதிகள் தவறுக்கு நிர்ப்பந்தப்படுத்தினாலும், அதிகாரிகள் உடன்பட மறுத்தார்கள். இந்த சூழலில்தான், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப் போவதாக அறிகிறோம்.

ஒரு மனுவில் ஒரு கேள்விதான் கேட்க முடியுமென்றால், விவரங்களை முழுவதுமாகப் பெறுவதற்கு நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கும். நீதிமன்ற ஸ்டாம்ப், விரைவு அஞ்சல் செலவு, டைப்பிங் செலவு என கூடுதலாக செலவு செய்யும்போது, அதற்கு வழியில்லாமல் தகவல் கேட்பவர்கள் மெல்ல ஒதுங்கிக் கொள்வார்கள் என்பதாலேயே இப்படியொரு சட்டத்திருத்தம் கொண்டுவர முடிவு செய்திருக்கிறார்கள்.

உதாரணமாக, ஒரு விண்ணப்பத்தின் மூலம் ஒருவர் ஐந்து பொருளின் கீழ் விவரம் கேட்டுக் கொண்டிருந்ததெல்லாம் இனி முடியாது. இப்போது ஒருவர் ஒரு மனுவுக்கு இருபத்தைந்து ரூபாய் செலவு செய்து விவரங்களைப் பெற்றுவிட முடியும். இனிமேல் இருநூறு ரூபாய்க்கும் அதிகமாக செலவு செய்ய வேண்டியிருக்கும்.

அதேபோல, இனிமேல் ஆவணங்களைத் தேடுவதற்கு காலத்துக்கேற்ப கட்டணம் நிர்ணயிக்கப் போகிறார்களாம். அதாவது, ஆவணத்தைத் தன் கையிலேயே வைத்துக் கொண்டு, தேடுதல் கட்டணமாக இனிமேல் ஒவ்வொரு தகவலுக்கும் ரூபாய் ஐநூறு கட்டணம் கட்டு என்றால், ஏழைகள் எங்கே போக முடியும்? மொத்தத்தில், தகவல் அறியும் உரிமை சட்டத்தை ஏழைகளும் பயன்படுத்த முடியாத சட்டமாக்க முயற்சிகள் நடக்கிறது.

தவிரவும், இதே தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், அரசு செய்யும் தவறுகள் அனைத்தையும் ஆதாரமாக பெற்று வெளிச்சம் போட்டுக் கொண்டிருந்தார்கள் பத்திரிகையாளர்கள் பலரும். அவர்களையும் இந்த சட்டத்திருத்த முயற்சி மூலம் முடக்கிப் போட வேண்டும் என்பதுதான், அரசியல்வாதிகளின் எண்ணம்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தை 2005-ல் கொண்டு வந்தபோது, அதில் ஏதேனும் மாற்றங்கள் என்றால், இரண்டாண்டுகளுக்குள் செய்து முடிக்கவேண்டும் என்று சட்ட விதிகளில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனாலும், ஐந்தாண்டுகளுக்குப் பிறகு சட்டத்திருத்தம் கொண்டுவர முயற்சிக்கிறார்கள்.

மொத்தத்தில், அரசின் தவறுகள் வெளியே வரக் கூடாது என்பதற்காக கொண்டுவரப்படவிருக்கும் இந்த சட்டத் திருத்தத்தை நிறுத்த வேண்டும். இதற்கு மக்கள்தான் பெரும் சக்தியாக கிளர்ந்து எழ வேண்டும்...’’ என்றார்.

திருத்தம் என்ற பெயரில் தகவல் அறியும் உரிமை சட்டத்தை தீர்த்துக் கட்டப் பார்க்கிறது மத்திய அரசு. மனித உரிமை ஆர்வலர்கள் இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள்?

தமிழ் சட்டம் அருஞ்சொற்பொருள்



A - வரிசை
A POSTERIORI - காரணவியூகம்
A PRIORI - காரியவியூகம்
ACKNOWLEDGEMENT - ஒப்புகை
ACKNOWLEDGEMENT OF DEPT - கடனொப்புகை
ACT - சட்டகை
APPEARANCE - முன்னிலையாதல்
ASSET - சொத்துடைமை
ASYLUM - புகலிடம்

B - வரிசை
BAILABLE OFFENCE - பிணைவிடுக் குற்றம்
BARRISTER - வழக்குரைஞர்
BEARER - கொணர்பவர்
BILL - சட்டகம்
BONA VACATIA - அறுமுதலாக, உரிமையுடையவரில்லா சொத்து
BRIBERY - கைக்கூட்டு/கையூட்டு

C - வரிசை
CHARGE-SHEET - குற்றப்பத்திரிகை
CIVIL - குடியியல்
COGNIZABLE OFFENCE - பிடியியல் குற்றம்
COMMISSION - ஆணைக்குழு
CONSENSUM AD IDEM - கருத்தொருமித்த
CONSTITUTION - அரசியலமைப்பு
CONSTITUTION LAW - அரசியலமைப்புச் சட்டம்
CULPABLE HOMICIDE AMOUNTING TO MURDER - கொலையாகுக் குற்றம்
CULPABLE HOMICIDE NOT AMOUNTING TO MURDER - கொலையாகாக் குற்றம்
CUSTODY - கையடைவு
CUSTOMS - சுங்கம், ஆயம்
CUSTOMS DECLARATION - சுங்கச் சாற்றுரை, ஆயச் சாற்றுரை
CUSTOMS DUTY - சுங்கத் தீர்வை, ஆயத் தீர்வை

D - வரிசை
DEATH SENTENCE - இறப்பு ஒறுப்பு
DECLARATION - சாற்றுதல்
DEPORT, DEPORTATION - நாடுகடத்து, நாடுகடத்தல்
DISCRETIONARY POWERS - விருப்புடை அதிகாரம்
DIVORCE - மணமுறிவு
DIVORCEE - மணமுறிவாளர்
DYING DECLARATION - மரண வாக்குமூலம்
DURESS - சட்டப்புற வலுக்கட்டாயம்

E - வரிசை
EMBEZZLEMENT - கையாடல்
EMIGRATION - குடியேறல்

F - வரிசை

G - வரிசை

H - வரிசை
HABIUS CORPUS - ஆட்கொணர்வு மனு
HARBOURING - ஆட்பதுக்கல்
HEARING - கேட்பு
HEARSAY EVIDENCE - கேள்விநிலைச் சான்று

I - வரிசை
IMMIGRATION (ENTRY) - குடிநுழைவு
IN PARI DELICTO - குற்றச்சமநிலை(யில்) - இரு சார்பினரும் ஒரே குற்றச் சமநிலையில் இருக்கும் போது

J - வரிசை
JUDGEMENT - தீர்ப்பு

K - வரிசை

L - வரிசை
LAW REPORT - தீர்ப்புத் திரட்டு
LEGAL REPRESENTATIVE - சட்டரீதியான பிரதிநிதி
LEGALTENDER - சட்டச் செலாவணி
LIABILITY - கடப்பாடு

M - வரிசை
MIGRATION - குடிபெயர்வு

N - வரிசை
NATIONALITY - நாட்டினம்
NON-BAILABLE OFFENCE - பிணைவிடாக் குற்றம்
NON-CONGNIZABLE OFFENCE - பிடியியலாக் குற்றம்
NOTARY PUBLIC - சான்றுறுதி அலுவலர்
NOVATION - புத்தீடு - பழைய ஒப்பந்தத்திற்கு மாற்றாக அதே சார்பினரோ வெவ்வேறு சார்பினரோ புதிய ஒப்பந்தம் செய்துக்கொள்வது.


O - வரிசை
OBITER DICTUM - தீர்ப்பின் புறவுரை
OFFER AND ACCEPTANCE - முனைவு மற்றும் ஏற்பு

P - வரிசை
PASSPORT - கடவுச்சீட்டு
PRIMA FACIE - உடன் முதல் நோக்கில்
PRIMA FACIE CASE - முதல் நோக்கிலிடு வழக்கு
PORT OF DEPARTURE - குடியேறிடம்
PORT OF ENTRY - குடிநுழைவிடம்
POWER OF ATTORNEY - பகராள், பகராள் செயலுரிமை ஆவணம்/பகர அதிகார ஆவணம்
PRINCIPLE CIVIL COURT - முதன்மை உரிமையியல் நீதிமன்றம்
PROBATION -மேற்காணிப்பு
PROBATIONARY (PERIOD) - தகுதிகாண் பருவக்காலம்/பருவநிலை
PROMISSORY NOTE - கடனுறுதிச்சீட்டு

Q - வரிசை

R - வரிசை
REASONABLE AND PROBABLE CAUSE - தகவு-நிகழ்வானக் காரணம்
REFUGEE - அகதி
REGULATION - ஒழுங்குவிதி
REVIEW - சீராய்வு

S - வரிசை
SOLICITOR - சட்டமுகவர்
SUCCESSION - வழிமுறையுரிமை

T - வரிசை
TRIBUNAL - தீர்ப்பாயம்

U - வரிசை

V - வரிசை
VACATION OF AN ORDER - உத்தரவு நீக்கம்
VIDEO PIRACY - திரைத் திருட்டு
VERDICT - தீர்வுரை
VISA - இசைவு

W - வரிசை
WARRANT - பிடியாணை/பற்றாணை

X - வரிசை

Y - வரிசை

Z - வரிசை

பொதுமக்களுக்கான குற்றவியல் சட்டங்கள் – ஒரு எளிய அறிமுகம்

சட்டம் ஒரு இருட்டறை!” என்பது புகழ்பெற்ற சட்டம் குறித்த கருத்துரையாக இருக்கிறது. ஆனால் சட்டம் தெரியாது என்பதற்காக எந்த ஒரு குற்றச்சாட்டிலிருந்தும் எவர் ஒருவரும் தப்பிக்க முடியாது!”. எனவே இந்நாட்டின் குடிமக்கள் அனைவரும் ஓரளவாவது சட்டம் தெரிந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றனர்.

சட்டத்தில் பல்வேறு பிரிவுகள் இருந்தாலும் சாதாரண பொதுமக்களின் வாழ்வில் அன்றாடம் குறுக்கிடும் சட்டங்கள் "கிரிமினல் சட்டம்" எ ன்று கூறப்படும் குற்றவியல் சட்டங்களும், சிவில் சட்டம் என்று கூறப்படும் உரிமையியல் சட்டங்களுமே! சிவில் சட்டப்பிரசினைகளை எதிர்கொள்வதற்குத் தேவையான காலஅவகாசம் ஓரளவுக்காவது வழங்கப்படுகிறது.

ஆனால் குற்றவியல் சட்டப்பிரசினைகளை எதிர்கொள்வதற்கு பெரும்பாலான நேரங்களில் கால அவகாசம் இருக்காது.

ஒரு குற்ற நிகழ்வில் நாம் பாதிக்கப்படலாம். அப்போது அந்த குற்ற நிகழ்வை ஏற்படுத்தியவர் மீது புகார் அளிப்பது எப்படி? அந்தப் புகாரை நிரூபிப்பது எப்படி? குற்றவாளிக்கு தண்டனை வாங்கித் தருவது எப்படி? நமது இழப்பிற்கான இழப்பீட்டை பெறுவது எப்படி? போன்ற பல்வேறு கேள்விகளுக்கான விடைகள் பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

அதேபோல ஒரு குற்ற நிகழ்வில் நாமும் உண்மையாகவோ, பொய்யாகவோ குற்றம் சாட்டப்படலாம். அவ்வாறு நம்மீது குற்றவியல் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்போது நமக்கான கடமைகள் என்ன? உரிமைகள் என்ன? என்பன போன்ற பல கேள்விகள் உள்ளன. பிரசினைகள் வந்து நம்வீட்டுக் கதவை தட்டியபின்னர் அதற்கான தீர்வை தேடுவதைவிட பிரசினைகளை தவிர்த்து வாழ்வதே புத்திசாலித்தனமானது. அதையும் மீறி பிரசினைகள் வந்துவிட்டால் அதை எதிர்கொள்வதற்கான திறனை பெற வேண்டும்.

இதற்கான நோக்கத்தில் இந்தத் தொடர் ஆரம்பிக்கப்படுகிறது. குறைந்தது வாரத்திற்கு ஒரு அத்தியாயம் பதிவு செய்யப்படும். வாசகர்களின் கேள்விகளும், கருத்துகளும் இந்த தொடரினை செலுத்தும் திசைகாட்டிகளாக இருக்கும். எனவே உங்கள் கேள்விகளை இங்கே பின்னூட்டமாக இடலாம். இங்கே கேட்கமுடியாத தனிப்பட்ட கேள்விகளை advravikumar2011@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தனிப்பட்ட முறையில் பதில் தர முயற்சிக்கிறோம்.

குற்றவியல் சட்டம் குறித்து ஒரு மேம்போக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எமது நோக்கம். எனவே இதில் சொல்லப்படும் வழிமுறைகள் அனைத்து சமயங்களிலும் சரியாக இருக்கும் என்று எதிர்பார்க்கக்கூடாது. தங்களுக்கு ஏற்படும் உண்மையான பிரசினைகளுக்கு அருகில் உள்ள வழக்கறிஞரின் உதவியை நாடுவதே முறையான அணுகுமுறையாக இருக்கும்.

இந்த எங்கள் பயணத்தில் வாசகர்களின் பங்களிப்பும் தேவையான அளவிற்கு இருக்கும் என்ற நம்பிக்கையுடன் பயணத்தை துவக்குகிறோம்.
                                                                                                                          வாசகர்
                                                                                                                                                                   RAVIKUMAR.S
                                                                                                             -"மக்கள் சட்டம்" குழு.



(அடுத்த பதிவு "புகார்" குறித்தது. எனவே வாசகர்கள் தங்கள் அனுபவங்களையும், சந்தேகங்களையும் பகிர்ந்து கொள்ளலாம்)

அமலுக்கு வராமலே அராஜகம் செய்யும் தவணைக் கொள்முதல் சட்டம்



அதிக மதிப்புடைய சரக்கு வாகனங்கள், மகிழுந்து இருசக்கர, மூன்று சக்கர வாகனம், தொலைக்காட்சி பெட்டி, குளிர்சாதனப் பெட்டி, துணி துவைக்கும் இயந்திரம், மாவு அரைக்கும் இயந்திரம் மடிக்கனினி என்பன உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை, அதன் மொத்த விலையில், ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை முன்பணமாக கட்டிவிட்டு மீதுமுள்ள தொகையை தவணை முறையில் வாரக் கணக்கிலோ, மாதக்கணக்கிலோ செலுத்தும் முறையே தவணைக் கொள்முதல் முறையாகும். நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களுக்கு இந்த முறையானது பெரிய அளவில் உதவியாக இருந்து வருகிறது.
தங்களது கனவுகள் நனவாவதற்கு இந்த முறையை பயன்படுத்திக் கொள்கின்றனர். அதே நேரத்தில் பல ஏழை குடும்பங்களை சிறிது சிறிதாக மன அழுத்தத்தை ஏற்படுத்தி கொன்று கொண்டிருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 
தவணை கொள்முதல் (HIRE PURCHASE SCHEME) திட்டத்தால் மக்கள் எதிர்நோக்கும் சவால்கள் :-

 சமீபத்தில் சென்னையில் புகழ் பெற்ற பட்டியலின தலைவரான அமரர் எம்.சி.ராஜாவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு மக்கள் மத்தியில் பெரும் விவாதத்திற்குள்ளானது. அவர்கள் தவணைக் கொள்முதல் முறையில் தனியார் நிறுவனம் ஒன்றில் வாங்கிய பொருட்களுக்கான தவணையைத் திரும்ப செலுத்த முடியாததால் அந்த நிறுவனத்தினர் கொடுத்த சித்ரவதைகளின் காரணமாக ஏற்பட்ட‌ மன அழுத்தத்தின் விளைவாகவே அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று கூறப்பட்டது. இது போன்ற தற்கொலைகள் தமிழகத்தில் இன்று பரவ‌லாக தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.

24 மாத ஒப்பந்தத்தில் குறிப்பாக 20 மாதங்கள் இருசக்கர வாகனத்திற்கு முறையாக தவணை தொகை செலுத்திவிட்டு, மீதமுள்ள நான்கு மாத தவணையினை செலுத்த தாமதமான காரணத்திற்காக அமுலுக்கே வராத தவணை கொள்முதல் சட்டத்தினை பயன்படுத்தி சட்டத்திற்கு புறம்பாக ‘வங்கி குண்டர்களால்’ வீடு புகுந்து களவாடப்படும் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. 

அதிலும் குறிப்பாக ஓரளவிற்கு பண வசதி கொண்டவர்களையெல்லாம் கண்டும் காணாமல் விட்டு விட்டு சாமானியர்களையும், விவசாய பணி மற்றும் பலசரக்கு சாமான்கள் கொண்டு செல்வதற்காக இரு சக்கர வாகனம், டிராக்டர் போன்ற வாகனங்களை கடன்பட்டு வாங்கியிருக்கும் கிராமத்து ஏழைகளைத்தான் ஆட்டுவித்தும், மிரட்டி வருகிறார்கள் என்பது தான் வேதனையிலும் வேதனை.

இன்னும் குறிப்பாக இப்படியொரு சட்டமே அமுலில் இல்லையென்றும், வங்கி, நிதி நிறுவனங்கள், கார்ப்பரேட் அமைப்புகள் போன்றவற்றிற்கு தவணை தொகையினை செலுத்த தாமதிக்கும் ஒருவரின் உடமையை அத்துமீறி திருட்டுத்தனமாக பறிமுதல் என்ற ‘நவீன திருட்டுத்தனம்’ செய்வதற்கு துளியும் உரிமையில்லை என்ற செய்தி பெரும்பாலான காவல் நிலையங்களுக்கு தெரியவில்லை என்பதும் இவ்வாறு வங்கிகளால் சட்டத்திற்கு முரணாக அமர்த்தப்பட்டிருக்கும் குண்டர்களால் பறிமுதல் நடக்கும் போது பாதிக்கப்பட்டோருக்கு எதிராகத்தான் காவல்துறையின் போக்கும் இருந்து வருகிறது என்பது அப்பட்டமான உண்மை. இதற்கான காரணம் காவல்நிலையங்களுக்கு இச்சட்டம் குறித்த விழிப்புணர்வு இன்னும் சென்றடையவில்லை என்பது தான் நிதர்சனம்.

உலகமயமாக்கல் சூழலால் சமீப காலமாக கிராமங்கள் காலியாகி நகரங்கள் பெருமளவில் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக சிறு மற்றும் பெரு நகரங்களில் தனியார் தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் துவங்கப்படுகின்றன. தொலைக்காட்சி, செய்தித்தாள் உள்ளிட்ட ஊடகங்கள் விளம்பரங்கள், செய்திகள் மூலமாக பொதுமக்களிடையே அதிக அளவில் பொருட்களை வாங்க வேண்டும் என்ற நுகர்வு காலச்சாரத்தை திட்டமிட்டு தொடர்ந்து உருவாக்குகின்றன. 

இதன் விளைவாக நடுத்தர மற்றும் அடித்தட்டு நிலையிலுள்ள குடும்பங்கள் தங்களது பொருளாதார தகுதிக்கும் கூடுதலான மதிப்புடைய பொருட்களை வாங்கிட வேண்டிய நிர்பந்தங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இந்த மனநிலையை தனியார் தொழில் நிறுவனங்கள், வங்கிகள், நிதிநிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தனிநபரின் வாங்கும் சக்திக்கும் அதிக மதிப்பிலான பொருட்களுக்கு, முன் தொகையாக ஒரு குறிப்பிட் அளவு பணத்தைப் பெற்றுக் கொண்டு மீதமுள்ள தொகையை தவணை முறையில் கட்டிக் கொள்ளலாம் என்று வசீகர திட்டங்களை அறிவித்து எண்ணிக்கையிலான குடும்பங்களை கடன் சுமைக்குள் தள்ளுகிறது.

தவணைக் கொள்முதல் முறையின் பின்ன‌ணி:

 உலகின் காலனியாதிக்கத்தை உருவாக்கிய இங்கிலாந்தில் 1846 ஆம் ஆண்டில் முதன் முதலாக‌ இந்த முறையானது அறிமுகம் செய்யப்பட்டது. 19ஆம் நூற்றாண்டில் தொழில் வளர்ச்சி மற்றும் மேம்பாடு எனும் தளத்தில் அரியதொரு கண்டுபிடிப்பாக கருதப்பட்டது. சிங்கார் எனும் நிறுவனம் தையல் இயந்திர பணிகளில் அறிமுகம் செய்தது ஒப்பந்தத்தில் ஈடுபட்டவர்களுக்கு சரக்குகள் கொண்டு செல்வதற்கான குதிரை வண்டிகள் மூலம் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டன. இங்கிலாந்து மற்றும் இதர நாடுகளில் மெல்ல மெல்ல பரவிய இந்த திட்டமானது, தானியங்கி கருவிகள் கண்டறியப்பட்ட காலத்தில் இன்னும் அதிகமாய் பரவத் தொடங்கியது.

 துவக்க காலங்களில் பொருட்களின் உற்பத்தியாளர்கள் பொருட்களை வாங்குபவர்களுடன் நேரடியாக ஒப்பந்தத்தில் ஈடுபட்டனர். நிதி உதவி செய்து விற்பனை செய்தார்கள். முதலாம் உலகப் போருக்கு பிறகு நீண்ட கால ஒப்பந்த முறை அமலுக்கு வந்தது. இந்த சமயத்தில் தான் உற்பத்தியாளர்களுக்கும், வாங்குபவர்களுக்கும் இடையே தரகர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். இதே கால கட்டத்தில் தான் இங்கிலாந்திடம் காலனி நாடாகயிருந்த இந்தியாவிலும் இந்த முறையானது அறிமுகம் செய்யப்பட்டது.

வாடிக்கையாளர்களின் இதர பொருட்களுக்காக தானியங்கி பொருட்களும், அதற்குத் தேவையான உதிரி பாகங்களும் ஒப்பந்தம் மூலம் மாற்றிக் கொள்ளப்பட்டது. ஆன போதிலும் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகுதான் இந்தமுறை நாடு முழுவதும் விரிந்து பரவத் தொடங்கியது. 1960களில் பல்வேறு பரிணாமங்களை எடுத்தது ஆனாலும் ஆழமாக வேரூன்றவில்லை.

வர்த்தக ரீதியாக செயல்பட்ட வங்கிகளும் இந்த முறையைப் பயன்படுத்த ஆரம்பித்தன. நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு நிதியுதவி செய்ய முடியாத காரணத்தால் தவணை கொள்முதல் மூலம் பொருட்களை விற்பனை செய்வதற்கும் கொள்முதல் செய்வதற்கும் தவணை முறையில் கடன் வழங்கும் திட்டங்களை வங்கிகள் மேற்கொள்ளத் துவங்கின. இப்படியாக தவணைக் கொள்முதல் முறை இந்தியாவில் வேரூன்றி வளர துவங்கியது.

தவணைக் கொள்முதல் சட்டம் 1972, இந்திய ஒப்பந்தச் சட்டம் 1872, பொருட்கள் விற்பனைச் சட்டம் 1830 போன்ற சட்டங்கள் ஏற்கனவே இயற்றப்பட்டிருந்தாலும் இவைகளின் சரத்துகள், நிபந்தனைகள் விதிகளை உள்ளடக்கி 1972 ஆம் ஆண்டில் தவணைக் கொள்முதல் சட்டம் இயற்றப்பட்டது.

இந்த சட்டம் அமலுக்கு வரும் நாள் குறித்து மூன்று முறை அரசிதழில் அறிவிப்பு வெளியிட்ட பிறகும் இறுதியாக எந்த தேதி முதல் இந்த சட்டம் அமலுக்கு வரும் என்று நாள் குறிப்பிடப்படாமலேயே ஒத்தி வைக்கப்பட்டது. இப்படியாக ஒரே ஒரு நாள் கூட அமலுக்கு வராத இந்த சட்டம் இறுதியில் கடந்த 2005 ஜூன் மாதம் 23ம் நாள் இரத்து செய்யப்பட்டது.

அமலுக்கே வராமல் இறுதியில் இரத்தும் செய்யப்பட்டுவிட்ட இந்த சட்டத்தைப் பயன்படுத்தி தான் தற்போது வரையிலும் தவணைக் கொள்முதல் முறையில் பொருட்களை வாங்கியவர்கள் தவணைகளைச் சரியாக திருப்பிச் செலுத்தாதபோது அந்த பொருளையோ, வாகன‌த்தையோ குண்டர்கள், அடியாட்கள் மூலமாக சட்டத்துக்குப் புறம்பாக தாக்கிச் செல்லும் அடாவடி நிலை நடந்தேறி வருகிறது.

தவணையை சரியாகத் திருப்பிச் செலுத்தாதபோது ஒப்பந்த மீறுகை ஏற்படுவதால் இந்திய ஒப்பந்தச் சட்டம் பொருட்கள் விற்பனை சட்டம் போன்ற சட்டங்களின் மூலமாக உரிமையியல் நீதிமன்றத்திலும் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் மூலமாக நுகர்வோர் குறைதீர் மன்றங்களிலும், முறையாக அறிவிப்பு செய்து தவணை தொகையினை கட்டத்தவறுவோர் மீது வழக்கு தொடர்ந்து பரிகாரம் பெற்றுக் கொள்ளலாம். மேலும் தவணை முறையில் பொருட்கள் வாங்குபவர் பின்னர் வேண்டுமென்றே கட்ட மறுத்தாலோ அல்லது கட்ட இயலாத சூழ்நிலை ஏற்பட்டாலோ அவர் ஜாமீன் சொத்தாக சமர்ப்பித்துள்ள ஆவணங்களை அல்லது உடைமைகளை முறைப்படி அறிவிப்பு வழங்கி நீதிமன்றத்தின் மூலம் வழக்கு தொடர்ந்து மீட்டுக் கொள்ளலாம். அதனை விடுத்து குண்டர்களை பயன்படுத்தி சட்டத்திற்குப் புறம்பான வழிமுறைகளை கையாளக்கூடாது என்று பல்வேறு மாவட்ட மற்றும் உயர்நீதிமன்றங்களில் தொடர்ந்து தீர்ப்புகள் பகரப்பட்டு வருகின்றன.

அரசின் கடமையும் - பொது மக்களின் விழிப்புணர்வும் :-

தவணைக் கொள்முதல் வழங்கும் நிதி நிறுவனங்களினால் அதன் வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த தர்ம சங்கடங்கள் உருவாக்கப்படுகிறது என்றும் அது போன்ற சூழ்நிலைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று 20வது சட்ட ஆணையம் தனது அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த “கனா கண்டேன், விரலுக்கேத்த வீக்கம், வரவு எட்டணா செலவு பத்தணா” போன்ற தமிழ்த் திரைபடங்களில் தகுதிக்கு மீறி தவணைக் கொள்முதலில் பணம் வாங்கிய குடும்பங்கள் எப்படியெல்லாம் சித்ரவதைக்குள்ளாக்கப்படுகிறது என்பது குறித்து தெளிவாகக் சித்தரித்து காட்டப்பட்டுள்ளது. ஆக பொது மக்களும், தங்களுக்கு தாங்களே சுய பரிசோதனை செய்து கொண்டு விழிப்புடன் இருத்தல் அவசியமாகும்.

இப்படியாக அமலுக்கே வராமல் இரத்து செய்யப்பட்டுவிட்ட ஒரு சட்டத்தைப் பயன்படுத்தி இன்று சமூகத்தில் தனியார் நிதி நிறுவனங்களால் நடைமுறைப்படுத்தப்படும் சட்டப்புறம்பான செயல்கள் கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கிறது. எனவே மத்திய, மாநில அரசுகள் இந்த சட்டப்புறம்பான செயல்கள் தொடர்பான நிகழ்வுகளில் சிறப்பு கவனம் செலுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு முறையான பாதுகாப்பினையும் வழங்கி, சட்டபுறம்பான நிகழ்வுகளில் ஈடுபடும் தனியார் நிதி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அத்தியாவசியமானதாகும். 

 இரவிக்குமார்

வக்கீல்கள், சட்டத்துறை மற்றும் நீதித்துறை தொடர்பானவர்களுக்கு மூன்று அலைபேசி செயலிகள்

இத்தளத்தில் தேட : நீங்கள் வாசிக்க விரும்பும் தகவல்களை தேடி பெறலாம். கீழ்க்கண்ட பெட்டியில் உள்ளிடவும்
 வக்கீல்கள், சட்டத்துறை மற்றும் நீதித்துறை தொடர்பானவர்களுக்கு மூன்று அலைபேசி செயலிகள்
அலைபேசியில் சில மென்பொருட்களை பரிசோதித்துக்கொண்டிருந்த போது அலைபேசி செயலி (mobile app) ஒன்றை ஒருவாக்குவது எளிது போல் தோன்றியது. மேலும் சிறிது நேரம் செலவழித்ததில், மூன்று செயலிகளை செய்துள்ளேன்
  1. இந்திய அரசியல் சாசனம் : Constitution of India செயலியை உங்கள் அலைபேசியில் நிறுவினால் இந்திய அரசியல் சாசனத்தை வாசித்துக்கொள்ளலாம். தேடும் வசதியும் உள்ளது. நீங்கள் தரவிறக்க வேண்டிய கோப்புகள் Constitution.jar மற்றும் Constitution.jad
  2. இந்திய தண்டனை சட்டம் : IPC - Indian Penal Code செயலியை உங்கள் அலைபேசியில் நிறுவினால் இந்திய தண்டனை சட்டத்தை முழுவதும் வாசித்துக்கொள்ளலாம். தேடும் வசதியும் உள்ளது. நீங்கள் தரவிறக்க வேண்டிய கோப்புகள் IPC.jar மற்றும் IPC.jad
  3. குற்றவியல் நடைமுறை சட்டம் : CrPC - The Code of Criminal Procedures செயலியை உங்கள் அலைபேசியில் நிறுவினால் குற்றவியல் நடைமுறை சட்டத்தை முழுவதும் வாசித்துக்கொள்ளலாம். தேடும் வசதியும் உள்ளது. நீங்கள் தரவிறக்க வேண்டிய கோப்புகள் CrPC.jar மற்றும் CrPC.jad
நோக்கியா அலைபேசியில் பரிசோதித்து பார்த்ததில் பிரச்சனை எதுவும் இல்லை. வேறு அலைபேசிகளில் பிரச்சனை இருந்தால் கூறவும்




Nokia PC Suite மென்பொருளில் இருக்கும் Install Application பயன்பாட்டினை உபயோகித்து நீங்கள் பிற செயலிகளை நிறுவுவது போல் இதையும் எளிதாக நிறுவலாம்