அபிக்யானுக்கு மூன்று வயது. அவன் தங்கை ஐஸ்வர்யாவுக்கு ஒரு வயது. அந்தக் குழந்தைகளின் நலனுக்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நார்வே நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சரிடம் முதலில் பேசினார். பிறகு வலியுறுத்தினார். பின்னர் நன்றி தெரிவித்தார்.
இந்தியர்களான அனுருப் பட்டாச்சார்யா-சகாரிகா இணையர் நார்வேயில் வசிக்கிறார்கள். அவர்கள் தங்களின் இரு குழந்தைகளையும் நார்வே நாட்டின் குழந்தை வளர்ப்பு சட்டவிதிகளுக்குப்ட்டு வளர்க்கவில்லை என்று அந்நாட்டு நீதிமன்ற உத்தரவின்படி, இரண்டு குழந்தைகளையும் அரசாங்க காப்பகத்திற்குக் (பார்னேவார்னே எனப்படும் குழந்தைகள் நல சேவை மையம்) கொண்டு சென்றுவிட்டார்கள். பட்டாச்சார்யாவின் பூர்வீகம் மேற்குவங்காளம். அதன் தலைநகர் கொல்கத்தாவில் வசிக்கும் அவருடைய பெற்றோர் மோனோடோஷ் சக்ரவர்த்தியும் ஷிகாவும் தங்கள் பேரப்பிள்ளைகளை மீட்டுத் தருமாறு, இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலை சந்தித்து முறையிட்டதும், இந்த விவகாரம் ஊடக விவாதமாகி, பலரது கவனத்தையும் ஈர்த்தது. அதன்பிறகு, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நார்வேயின் வெளியுறவு அமைச்சரான ஜோனஸ் கார்ஸ்டோரிடம் பேசி, உடனடியாகவும் உடன்பாடானதுமான ஒரு தீர்வை மேற்கொள்ளும்படி வலியுறுத்தினார்.
நார்வேயில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் அந்நாட்டு அதிகாரிகள் பேசினர். இரண்டு குழந்தைகளையும் அவர்களின் சித்தப்பாவான அருணாபாஷ் பட்டாச்சார்யாவிடம் ஒப்படைப்பது என, குழந்தைகளின் பெற்றோர் சம்மதத்துடன் முடிவுக்கு வந்தனர். கொல்கத்தாவில் உள்ள அருணாபாஷை இந்திய அரசாங்கத்தின் செலவில் நார்வேக்கு அனுப்பி, குழந்தைகளை அழைத்து வருவது என்றும் இரண்டு குழந்தைகளுக்கும் 18 வயதாகும்வரை அவர்தான் காப்பாளர் என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. குழந்தைகளின் பெற்றோர் என்ற உரிமையுடன் அனுருப்பும் சகாரிகாவும் தங்கள் பிள்ளைகளை சந்திக்கலாம் என்றும் நார்வே அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதற்காகத்தான் நார்வே வெளியுறவு அமைச்சருக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நன்றி தெரிவித்தார்.
அந்த இரண்டு குழந்தைகளையும் அரசாங்கக் காப்பகத்திற்கு அழைத்துச் செல்லவேண்டும் என்று நார்வே நீதிமன்றம் ஏன் உத்தரவிட்டது? இங்குதான் இந்தியாவின் குடும்ப அமைப்புமுறை-குழந்தை வளர்ப்பு முறை ஆகியவற்றுக்கும் மேற்கத்திய நாடுகளின் முறைக்குமான வேறுபாடுகளும் மோதல்களும் வெளிப்படுகின்றன.
சின்னவயதில் நிலாவைக் காட்டி சோறு ஊட்டிய தாயை நினைத்து நினைத்து கவிஞர்கள் உருக்கமான கவிதை எழுதுவது இந்திய மரபு. தாயின் கைப்பக்குவத்தில் சமைக்கப்பட்ட உணவை அவளது கையாலேயே ஊட்டும்போது குழந்தைகளுக்கு கூடுதல் ஊட்டச்சத்து கிடைக்கும் என்ற உணர்வு நமக்கு இருக்கிறது. மேற்கத்திய நாட்டின் நிலைமை வேறு. நார்வேயில் குழந்தைகளுக்குத் தாய் தன் கையால் சோறு ஊட்டினால் அது ஆரோக்கியக் கேடு. தாயின் உடலில் ஏதேனும் நுண்கிருமிகள் இருந்தால் அதுவும் குழந்தைக்கு ஊட்டப்படும் சோறுடன் சேர்த்து வயிற்றுக்குள் போய்விடும் என்கிற எச்சரிக்கை உணர்வு அங்கே நிலவுகிறது. நார்வேயில் உள்ள இந்தியத் தாய் தன் குழந்தைகளுக்குக் கையால் சோறு ஊட்டியதால், அவற்றின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்து மாதம் வயிற்றில் சுமந்த தாய் அதன்பின் தன் குழந்தையை நெஞ்சிலும் மடியிலும் சுமப்பது இந்திய வழிமுறை. வளர்ந்து ஆளானபிறகும் எனக்கொரு தாய்மடி கிடைக்குமா என்று ஏங்குவது பிள்ளைகளின் வழக்கம். படுக்கும்போது தங்களுக்குப் பக்கத்தில் குழந்தைகளைப் படுக்கவைத்துக்கொண்டு அரவணைத்தபடியே தூங்குவர் இந்தியப் பெற்றோர். அங்கே நிலைமை வேறு. குழந்தைகள் படுப்பதற்கென வீட்டில் தனி இடம் இருக்கவேண்டும். அதுதான் குழந்தை எந்தவித நெருக்கடியுமில்லாமல் வசதியாகத் தூங்குவதற்குரியதாக இருக்கும் என்கிறது நார்வே நாட்டின் சட்ட திட்டம்.
அதுபோலவே, குழந்தைகள் படிப்பதற்கும் விளையாடுவதற்கும் வீட்டுக்குள் போதுமான இடவசதி இருக்கவேண்டும் என்கிறது நார்வே அரசாங்கம். நம் ஊரில் பெரும்பாலான வீடுகளில் இருக்கிற வசதியைக் கொண்டே படிக்கவேண்டிய நிலைமை. கல்விக்கடவுளான சரஸ்வதிக்கும் ஏனைய கடவுள்களுக்கும் வீட்டுக்குள் பூஜை அறை நிச்சயம் இருக்கும். படிப்பதற்கென்று தனி அறை ஒதுக்கும் பழக்கம் மிகத் தாமதமாகவே நம்மிடம் ஏற்பட்டுள்ளது.
நமது குழந்தை வளர்ப்பு முறைப்படி, பண்டிகை நாட்களில் டி.வியில், ‘இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக’ என்ற பெருமையுடன் அருந்ததி படத்தையோ, முனி படத்தையோ அதன் இரண்டாம் பாகம் எனப்படும் காஞ்சனாவையோ போட்டால் குடும்பம் மொத்தமும் உட்கார்ந்து விதம் விதமாக வந்து போகும் கிராஃபிக்ஸ் பேய்களை ரசிக்கலாம். செத்து செத்த விளையாடலாமா என்று வடிவேலுவிடம் முத்துக்காளை கேட்பதுபோல.
நார்வே நாட்டில் இப்படி செத்துச் செத்தெல்லாம் விளையாட முடியாது. குழந்தைகளின் பொழுதுபோக்கு-அவர்களுக்கான விளையாட்டு-அந்த விளையாட்டுக்கான பொம்மைகள் இவை பற்றியெல்லாம் அரசின் விதிகளில் வரையறுக்கப்பட்டுள்ளன. பட்டாச்சார்யா தம்பதிகள் வசிக்கும் வீடு குழந்தைகள் விளையாடுவதற்கான வசதியுடன் இல்லை என்றும், அவர்கள் படுப்பதற்கென தனி பெட் இல்லை என்றும் அவர்களின் வயதுக்குப் பொருந்தாத விளையாட்டு பொம்மைகளைப் பெற்றோர் வாங்கித் தந்திருக்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டப்பட்டுத்தான் குழந்தைகளைக் காப்பகத்திற்குக் கொண்டு சென்றது நார்வே அரசு.
இப்படியான ‘கொடுமை’யானக் குற்றங்களை சுமத்தி, அபிக்யானையும் ஐஸ்வர்யாவையும் அரசாங்கக் காப்பகத்திற்குக் கொண்டு போய்விட்டார்கள் என்பதுதான் இந்தியத் தரப்பின் குற்றச்சாட்டு.
தான் பெற்ற குழந்தையை வளர்க்க அதன் தாய்க்குத் தெரியாதா என்பது இந்தியர்களின் கேள்வி. குழந்தையை எப்படி வளர்க்கவேண்டும் என்ற சட்டவிதிகள் இருப்பது தாய்க்குத் தெரியாதா என்பது நார்வே தரப்பின் கேள்வி. ஊடகப் பட்டிமன்றங்கள் இங்கிருந்துதான் தொடங்கின.
மேற்கத்திய நாட்டுக் குழந்தைகளைவிட இந்தியக் குழந்தைகள்தான் பெற்றோரிடம் அதிகப் பற்றுடன் இருக்கின்றன என்று ஒரு தரப்பினரும், இந்தியாவில் வாழ விருப்பமில்லாமலோ- வாழும் சூழல் இல்லாமலோ- அல்லது இதைவிட நல்ல வசதியாக வாழலாம் என்றோ நார்வே சென்ற தம்பதியினர் அந்த நாட்டு சட்டப்படி குழந்தைகளை வளர்ப்பதுதானே முறையாக இருக்கும் என இன்னொரு தரப்பினரும் அனல்பறக்கும் வாதங்களை எழுப்பி வருகின்றனர்.
பட்டாச்சார்யாக்களின் குரல் இந்திய அரசாங்கத்தின் காதுகளில் பலமாக ஒலிக்க வைக்கப்பட்டதால், அந்த இரண்டு குழந்தைகளும் தங்கள் சித்தப்பாவின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. அதுதான் இந்த பட்டிமன்ற விவாதங்களைக் கடந்த இப்போதைய ஆறுதல். இனி நீங்கள் சொல்லுங்கள்… குழந்தை வளர்ப்பில் இந்திய முறை சிறந்ததா? மேற்கத்திய முறை சிறந்ததா?
மேலை நாடுகளில் குழந்தைகள் சிறுவயதிலிருந்தே சுயமாக வாழக் கற்றுக் கொள்கிறார்கள். சுயசிந்தனை வளர்க்கப்படுகிறது. சுயஆக்கத்திறனை குழந்தைகள் பாலர் பள்ளியில் கற்றுக் கொடுக்கிறார்கள். 6 வயதில் தானே ரொட்டி செய்து சாப்பிடும் அளவிற்கு அது பழகிவிடும். தானே எல்லாவற்றையும் அலம்பி வைக்கும். எதற்கும் அம்மா ஆதரவைத் தங்கியிருக்காது வளரும். இப்பழக்கம் பெரியவனானதும் காப்பி மனைவிதான் செய்து தரவேண்டும் என்ற எண்ணம் அவனிடம் இருக்காது. பகிர்ந்து செயல்களைப் பழகும் வழக்கம் இங்கு உண்டு. இரண்டு கலாசாரத்தில் வளரும் குழந்தைகள் சரியாகப் புரியவைக்காவிடின் சிரமம்தான். குழந்தைகள் வீட்டில் விளையாடும்போது பெற்றோர் அஜாக்கிரதையால் பல விபத்துகள் இங்குள்ள எங்கள் குடும்பங்களில் நடக்கிறது. அவ்வாறு நடந்தால் பெற்றோர் குழந்தைகளை வளர்க்கத் தகுதி இல்லை என்ற முடிவிற்கு வந்து அரசாங்கக் காப்பகம் குழந்தைகளை எடுத்துக்கொண்டு போனதும் பெற்றோர் மனநோய்க்கு உள்ளாகிறார்கள். அப்புறம் என்ன மனநோய் உள்ள பெற்றோர்களுடன் குழந்தையை விடமுடியாது என சக சேவை கூறுகிறது. இதுதான் ஐயா இந்த நாம் குழந்தைகளுக்கு முழு முக்கியத்தும் இங்கு உண்டு
ReplyDeleteமேற்கத்திய முறையில் வளர்ப்பதுதான் நல்லது.சிறு வயதிலிருந்தே தனி அறை கொடுத்து வளர்க்கும்போது அக்குழந்தை முழு தன்னம்பிக்கையுடன் வளரும். உலகின் எந்த மூலைக்கும் தன் வாழ்க்கைக்காக தனித்துச் செல்லத்தயங்காது. 2 வயதிலிருந்து தனிப் படுக்கை அறை, படிக்கும் அறை,விளையாட்டு,குழந்தைகளுக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என தேர்வு செய்து கொடுக்கவேண்டும்.இப்படி வளர்க்கப்படும் குழந்தை நிச்சயம் இந்தியக் குழந்தையை விட சிறப்பாகவே வளரும்.
ReplyDelete