Saturday, 29 October 2011

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? சரி பார்த்து கொள்ளுங்கள்


தமிழ் நாடு அரசு
தேர்தல் துறை
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? சரி பார்த்து கொள்ளுங்கள்


ஜனநாயகத்தில் மக்களுக்கு கிடைத்த ஒரே உரிமை ஓட்டுரிமை. பலரும் வாக்களிக்க செல்லும் போது வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இல்லாமல் வாக்களிக்க முடியாமல் திரும்பி இருக்கிறார்கள். மக்களாட்சி தத்துவத்தின் அடிப்படையில் மக்கள் பிரதிநிதிகளை மக்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்திய அரசியல் அமைப்பு சட்ட படி பதினெட்டு வயது நிரம்பிய ஆண் பெண் இருபாலருக்கும் வாக்களிக்கும் உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. நம்மை யார் ஆட்சி செய்ய வேண்டியதும் நாம் தான். முதலில் உங்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை சரி பார்த்து கொள்ளுங்கள். விடுபட்டிருந்தால் உடனடியாக வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர்களை சேர்க்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுத்து கொள்ளுங்கள். 

இன்னும் இரண்டு மாதத்தில் தமிழ்நாடு சட்ட சபைக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தின் தலைவிதியை நீங்கள் தீர்மானிக்க போகிறீர்கள் எனவே உங்கள் பெயர்களை இந்த நேரத்தில் நீங்கள் சரி பார்த்து கொண்டால் உங்கள் உரிமையை நீங்கள் நிலை நாட்டலாம். தமிழ் நாடு தேர்தல் ஆணையத்தின் மூலம் கடைசியாக புதுப்பிக்க பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதை இந்த இணைப்பில் சென்று பார்க்கலாம் புதுப்பிக்க பட்ட வாக்காளர் பட்டியல் .  

தமிழில் தேட இந்த இணைப்பில் செல்லலாம்   இந்த இணைப்பில் சென்று உங்கள் மாவட்டம், உங்கள் தொகுதி நீங்கள் தேர்வு செய்து உங்கள் பெயர்கள் இருக்கிறதா என்றும் பார்க்கலாம். 

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? சரி பார்த்து கொள்ளுங்கள் http://www.elections.tn.gov.in/eroll/



reg.
ravi.

Friday, 21 October 2011

ஆய கலைகள் அறுபத்து நான்கு

1. எழுத்திலக்கணம் (அக்ஷரஇலக்கணம்);

2. எழுத்தாற்றல் (லிபிதம்);

3. கணிதம்;

4. மறைநூல் (வேதம்);

5. தொன்மம் (புராணம்);

6. இலக்கணம் (வியாகரணம்);

7. நயனூல் (நீதி சாத்திரம்);

8. கணியம் (சோதிட சாத்திரம்);

9. அறநூல் (தரும சாத்திரம்);

10. ஓகநூல் (யோக சாத்திரம்);

11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்);

12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்);

13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்);

14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்);

15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்);

16. மறவனப்பு (இதிகாசம்);

17. வனப்பு;

18. அணிநூல் (அலங்காரம்);

19. மதுரமொழிவு (மதுரபாடணம்); இனியவை பேசுதல்/வசீகரித்தல்

20. நாடகம்;

21. நடம்;

22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்);

23. யாழ் (வீணை);

24. குழல்;

25. மதங்கம் (மிருதங்கம்);

26. தாளம்;

27. விற்பயிற்சி (அத்திரவித்தை);

28. பொன் நோட்டம் (கனக பரீட்சை);

29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை);

30. யானையேற்றம் (கச பரீட்சை);

31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை);

32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை);

33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை);

34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்);

35. மல்லம் (மல்ல யுத்தம்);

36. கவர்ச்சி (ஆகருடணம்);

37. ஓட்டுகை (உச்சாடணம்);

38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்);

39. காமநூல் (மதன சாத்திரம்);

40. மயக்குநூல் (மோகனம்);

41. வசியம் (வசீகரணம்);

42. இதளியம் (ரசவாதம்);

43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்);

44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்);

45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்);

46. நாடிப்பயிற்சி (தாது வாதம்);

47. கலுழம் (காருடம்);

48. இழப்பறிகை (நட்டம்);

49. மறைத்ததையறிதல் (முஷ்டி);

50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்);

51. வான்செலவு (ஆகாய கமனம்);

52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்);

53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்);

54. மாயச்செய்கை (இந்திரசாலம்);

55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்);

56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்);

57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்);

58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்);

59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்);

60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்);

61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்);

62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்);

63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்);

64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்).

Monday, 10 October 2011

நன்றாக பேசுவதில் எப்படி எல்லாம் பேசக் கூடாது -


பிறருடன் பேசும் போது, கேட்பவரால் சகித்துக் கொள்ள முடியாதவாறு பேசுவர் சிலர். இப்படி பேசுவதில் முக்கியமாக ஆறு வகைகள் உள்ளன.

* இஷ்டமில்லாமல் பேசுபவர்: தனக்கே இஷ்டமில்லாமல் பேசுவது ஒருவகை. இதை, எதிராளிக்கும் கேட்க இஷ்டம் இருக்காது.

* இரைந்து உணர்ச்சி வசப்பட்டுப் பேசுபவர்: இதனால் கேட்பவரின் கவனம் பேசுபவரின் உணர்ச்சியில்தான் இருக்குமே தவிர, என்ன கூறு#கிறார் என்பதில் இருக்காது.

* முணுமுணுப்பவர்: எத்தனை கவனமாக கவனித்தாலும், இவர் என்ன சொல்கிறார் என்றே புரியாது.

* மூக்கால் பேசுபவர்: இவர் பேசுவதை கேட்கும் போது, இவர் ஏன் உடனடியாக ஒரு டாக்டரைப் பார்க்கக் கூடாது என்று நினைக்கத் தோன்றும்.

* வேகமாக பேசுபவர்: மூச்சு விடாமல் சிலர் வேகமாக பேசும் போது, சில சமயம் என்ன பாஷை பேசுகிறார் என்றே புரியாது.

* தயங்கி, தயங்கி பேசுபவர்: என்ன பேசுகிறோம், எதற்காகப் பேசுகிறோம் என்றே புரியாமல், தயங்கி, தயங்கி நீண்ட நேரம் எடுத்து, சில வார்த்தைகளைப் பேசுவர். இவைகள் தவிர்க்கப்பட வேண்டும்.


நன்றாக பேச…: பேசும் போது, உங்கள் குரல் சரியாக இல்லை என்று நினைத்தீர்களானால், அதற்கு காரணம் சரியாக மூச்சு விடு வதில்லை என்று அர்த்தம். தேவையான அளவுக்கு பேசும் போது, வாயையும் திறப்பதில்லை என்பது ஒரு முக்கியக் காரணம். யார் மூச்சு விடுவதில் சீராக வைத்துக் கொள்ளாமல் இருக்கிறாரோ, அவரால் சரியாகவும் பேச முடியாது. சரியாக பேச தொண்டைக்குப் பயிற்சி தேவை. பேசுவது தெளிவாகப் புரிய எந்த அளவுக்கு திறக்க வேண்டுமோ, அந்த அளவுக்குத் திறப்பதால் நஷ்டம் ஏதுமில்லை. தனிமையான இடத்தில் இரைந்து எதையாவது படிப்பதன் மூலம், தெளிவாகப் பேசுவதற்குப் பயிற்சி பெறலாம்.

சின்னச் சின்ன தடுமாற்றங்களால் கூட பல நேரங்களில் பிரச்சினை ஏற்பட்டு விடக்கூடும்


ல அனுபவங்களைக் கொண்டதுதான் வாழ்க்கை. சின்னச் சின்ன தடுமாற்றங்களால் கூட பல நேரங்களில் பிரச்சினை ஏற்பட்டு விடக்கூடும்.
சாவியை மறந்து வைத்துவிட்டு செல்வது, சீப்பை தலையில் வைத்துக் கொண்டு தேடுவது போன்றவைதான் சின்னச் சின்ன தடுமாற்றங்கள். இதை கவனக் குறைவு என்றும் சொல்லலாம். எதையும் முறையாக செய்து பழகாதவர்களுக்கும், ஞாபகமறதி கொண்டவர்களுக்கும் இதுபோன்ற தடுமாற்றங்கள் நிறைய ஏற்படும்.
குடும்பத்தில் பலரும் புழங்கும் சூழல் இருப்பதாலும் பல தடுமாற்றங்கள் ஏற்படும். அதாவது நீங்கள் பயன்படுத்தும் பொருளை மனைவியோ, குழந்தைகளோ இடம் மாற்றி வைத்துவிட்டாலும் குழப்பமும், தடுமாற்றமும் வரும்.
இப்படி சின்னச் சின்ன தடுமாற்றங்களால் ஏற்படும் இழப்புகள் சாதாரணமானவை அல்ல. பர்ஸை மறந்துவிட்டு பஸ் பயணம் கிளம்பினால் சிக்கல் தானே! பள்ளிக்கு சென்ற பிறகு `ஐடென்டி கார்டு’ இல்லாவிட்டால் தண்டனை கொடுப்பார்கள் தானே, இப்படித்தான் சின்னச் சின்னத் தடுமாற்றங்கள் அதைத் தொடர்ந்து சில பிரச்சினைகளையும், இழப்புகளையும் தந்துவிடும்.
அது சில நேரங்களில் பெரிய இழப்பாகவும் இருக்கும். வேலைக்கு நேர்முகத் தேர்வுக்கு சென்ற இடத்தில் `ஒரிஜினல்’ சான்றிதழ் கொண்டு செல்ல மறந்ததால் கிடைக்க இருந்த வேலையை இழந்தவர்கள் உண்டு. தெரியாத இடத்தில் பணம், சான்றிதழை தொலைத்துவிட்டு தடுமாறியவர்களும் உண்டு.இப்படி தடுமாற்றங்கள் வராமல் இருப்பதற்கு சிறந்த வழி, சீராக செயல்படுவதுதான். அதாவது செல்போன், ஐ.டி. கார்டு, பைக் சாவி போன்ற சின்னச் சின்ன பொருட்கள் யாவற்றையும் ஒரே இடத்தில் வைத்துப் புழங்குவது எதையும் மறக்காமல் எடுத்துச் செல்ல உதவியாக இருக்கும்.
குறிப்பிட்ட நேரத்துக்குள் ஒரு வேலையை முடிக்காவிட்டாலும் அது அடுத்த வேலையில் தாமதத்தையும், தடுமாற்றத்தையும் தரும். அப்புறம் இன்னொரு விஷயம், இப்படி ஒரு வேலையை செய்து முடிக்காததால் ஏற்படும் மனஅழுத்தத்தைப்போல் வேறு பிரச்சினை எதுவுமில்லை. அதாவது ஒரு வேலையை முடிக்காவிட்டால் அது தொடர்ச்சியாக வரும் அடுத்த வேலையில் எதிரொலிக்கும். இடையில் புகும் நபர்களின் மீது எரிச்சலைக் கொட்ட வைக்கும். அதனால் வேலையையும், நன்மதிப்பையும் பாதிக்கும். கோபம், மன அழுத்தம் போன்றவற்றையும் கொண்டு வந்துவிடும். எனவே எல்லாவற்றையும் திட்டமிட்டு செய்யுங்கள். ஞாபகமறதி, தடுமாற்றங்களை தவிர்த்திடுங்கள்!

உங்களுக்குள் ஒரு முறை கேட்டுப்பாருங்கள். வாழ்க்கை என்பது என்ன?


இந்த தலைப்பையே உங்களுக்குள் ஒரு முறை கேட்டுப்பாருங்கள். வாழ்க்கை என்பது என்ன?
- உயிரோடு இருப்பதா?
- மகிழ்ச்சியாக இருப்பதா?
- பணம், புகழைத் தேடி தலை தெறிக்க ஓடுவதா?
- தோல்விகளில் கற்றுக் கொள்வதா?
- வெற்றிகளில் பெற்றுக் கொள்வதா?
- தன்னலமற்ற அர்ப்பணிப்பா?
- தத்துவங்களின் அணிவகுப்பா?
…. இவைகளில் எது வாழ்க்கை என்று உறுதியாக கூற முடியாவிட்டாலும், பிறந்தவர் அனைவரும் வாழ்ந்தே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
வாழ்க்கை என்பது ஓர் அனுபவம். ஆளுக்கு ஆள் மாறுபடும். சுகமோ துக்கமோ அனுபவம் நம்மை பலப்படுத்துகிறது. காயப்படுத்துகிறது, சிரிக்க வைக்கிறது, அழவைக்கிறது. முடிவில் இதில் எது வாழ்க்கை என்று சிந்திக்க வைக்கிறது.
சிந்திக்கும் மனிதன் தெளிவடைந்தானா என்றால் அதுதான் இல்லை. மேலும், மேலும் குழம்பி முடிவில் தற்கொலையில் வாழ்வை பறிகொடுக்கிறான்.
இறைவனால் இவ்வுலகில் படைக்கப்பட்ட மற்ற ஜீவராசிகளுக்கு வாழ்க்கையை பற்றிய ஆராய்ச்சி எதுவுமில்லை. விலங்குகள் தற்கொலை செய்து கொள்வதுமில்லை. காரணம் அவைகளுக்கு முடிவை பற்றிய பயமில்லை. அந்த வகையில் அறியாமை ஒரு வரம்.
தான் அறிவாளி என்று கர்வப்படும் மனிதனால் வாழ்க்கையில் ஜெயிக்க முடிவதில்லை. காரணம் அறிவு மட்டும் வாழ்க்கைக்கு போதாது. அதற்கு மேலும் ஒன்று தேவைப்படுகிறது. அது என்ன..? தன்னம்பிக்கை. மனோபலம் உள்ளவனுக்கு மட்டுமே அது சாத்தியமாகும்.
அப்படி ஒரு விஷயம் இருக்கிறதா…? என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள்.
வாழ்க்கையை பற்றி தீர்மானமான விளக்கம் எதுவும் இல்லாவிட்டாலும், வாழ்க்கையின் பிரச்சினைகளுக்கு மனோபலம் ஒன்று மட்டுமே தீர்வாக அமைகிறது. ஒவ்வொருவரின் வாழ்க்கை அனுப வங்களே அவர்களின் வழிகாட்டி. அனுபவங் களிலிருந்து அவர்கள் கற்றுக் கொள்ள வேண் டும். அப்படி கற்றுக் கொண்டவன் ஜெயிக் கிறான். கற்றுக் கொள்ளாதவன் தவிக்கிறான்.

ஒரு ஜெர்மனிய பழமொழி, “அனுபவம் என்ற பள்ளியில் மூடன் எதையும் கற்றுக் கொள்ளமாட் டான்” என்கிறது. அப்படி கற்றுக் கொள்ளாதவரை வாழ்க்கை அவனுக்கு வசப்படாது.
மற்ற உயிரினங்களிலிருந்து மனிதன் பல விதத்தில் மாறுபடுகிறான். சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்வதில், தன் தேவைகளை தானே தேடி பூர்த்தி செய்து கொள்வதில், நன்மை- தீமைகளை பகுத்தறியும் விதத்தில் பிறருக்கு வழிகாட்டியாக இருப்பதில்..! இத்தனை யும் பெற்று, சிந்தித்து செயல்படும் திறன் பெற்றிருக்கும் மனிதன், சில நேரங்களில் மிருகத்தை விட கீழ்நிலைக்கு வந்து விடுகிறான். போகும் திசை தெரியாமல் மயங்கி நிற்கிறான். அப்போது தான் வாழ்க்கையில் பயம் ஏற்படுகிறது.
துன்பம் துரத்தும் போது ஆன்மிகமும், அறிவியலும் அவனுக்கு துணை போவதில்லை. தோல்விக்கு பின்பு கிடைக்கும் வெற்றிக்காக காத்திருக்க அவனுக்கு பொறுமையில்லை. தோல்வியே வாழ்க்கை என்று முடிவுசெய்து, தனக்கு சோகமான முடிவைதேடிக் கொள்கிறான். தோல்விகள் நமக்கு நல்ல அனுபவங்களை தந்து, நம்மை பலசாலியாக்குகிறது.
நம்பிக்கை எனும் வானவில் நம்மிடம் எப்போதும் இருக்கவேண்டும். வானவில் தோன்றும் போது வானம் அழகாகிறது. நம்பிக்கை தோன்றும் போது வாழ்க்கை அழகாகிறது. ஒவ்வொரு மனிதனின் கையிலும் அழகான வாழ்க்கை இருக்கிறது. அதை வளப்படுத்தும் நம்பிக்கை எனும் வானவில்தான் தோன்ற மறுக்கிறது. அப்போது வாழ்க்கை வெறுமையாகிறது. அந்த வெறுமையை நிரப்ப யாராலும் முடியாது.
இரவும், பகலும் வருவதுமில்லை. போவதுமில்லை. அவை பூமி சுழலுவதால் ஏற்படும் மாற்றங்கள். சுகமும், துக்கமும் வருவதுமில்லை. போவதுமில்லை. நாம் வாழ்வதால் வரும் மாற்றங்கள். பூமி இரவுக்காக வருந்துவதுமில்லை, பகலுக்காக மகிழ்வதுமில்லை. அது ஓர் கர்மயோகியைப் போல தன் பணியை செய்துக் கொண்டிருக்கிறது.
சூரியன் உயிர்களை வளர்க்கிறது. காக்கிறது. அது இல்லாத நேரத்திலும் உயிர்கள் அதை எதிர்நோக்கி காத்திருக்கிறது. ஆனால் இன்றைய அவசர மனிதனிடம் விடியலுக்காக காத்திருக்கும் பொறுமையில்லை. கல்வியறிவு அதிகமில்லாத காலத்தில் கூட இருந்திராத மனச்சுமை, டென்ஷன், தற்கொலைகள், இப்போது தான் அதிகமாகி வருகிறது. எந்த அறிவியல் வளர்ச்சியும் இவர்களை வாழவைப்பதில்லை. இந்த நவீனயுகத்தில் தற்கொலை தடுப்பு மையங்கள் ஆங்காங்கே உருவாகி வருவது வரமா? சாபமா?
உங்களுடைய வாழ்க்கையில் மற்றவர்களுக்கு தேவையான முன் உதாரணம் இருக்க வேண்டும். தோல்விகளை தாண்டி வெளிவந்தால் தான் அங்கே வெற்றி நம்மை வரவேற்க காத்திருக்கும். வெற்றிக்காக உழைக்கிறோம். தோல்வி நம் முன்வந்து நிற்கும் போது துவண்டு போகிறோம். தோல்வி தான் முதலில் வரும். அது உலக இயல்பு.
தோல்வியை கண்டு மிரண்டு போய் வாழ்க்கையை தொலைத்து விடுகிறோம். ஏன் இந்த அவசரம். தோல்விக்கு பின் வெற்றி என்ற வாக்கு பொய்யா, மெய்யா என்று பொறுத்திருந்து பார்க்கலாமே.
இன்று பல்வேறு சூழலால் பாதிக்கப்பட்ட மனிதர்கள் வாழ்க்கையில் நம்பிக்கை இழந்து காணப்படுகிறார்கள். எதிர்பார்த்த ஒன்று கிடைக்காவிட்டால் விரக்தியின் எல்லைக்கே போய்விடுகிறார்கள். நாம் நினைத்தால் எதுவும் நடக்கும் என்ற தத்துவம் அவர்களுக்கு புரிவதில்லை.
நாம் நினைக்கும் எண்ணங்கள் உறுதியாகவும், நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும். அந்த பாசிடிவ் எண்ணங்கள் நம் சூழ்நிலைகளை மாற்றியமைத்து நம்மை வெற்றி பாதையில் அழைத்துக் செல்லும். நம் எண்ணம் ஒருநாள் செயலாகும் போதுதான் அந்த எண்ணத்தின் வலிமை புரியும். நாம் எதுவாக நினைக்கிறோமோ அதுவாக மாறிவிடுவோம்.
- நம்மைவிட உடலில் பலசாலி யானை
- நம்மைவிட வேகத்தில் சிறந்தது குதிரை
- நம்மைவிட உழைப்பில் சிறந்தது கழுதை.
இப்படி மிருகங்கள் நம்மைவிட பலமடங்கு பலசாலிகளாக இருந்தாலும், நாம்தான் இவைகளை அடக்கி ஆள்கிறோம். காரணம் மனிதன் மட்டுமே மனோபலம் கொண்டவன். நமக்கு ஏற்படுகிற பிரச்சினைகளும் அப்படித்தான். அதனை அடக்கியாளும் சக்தி நம்மிடம் உள்ளது.

உங்கள் தன்னம்பிக்கையை சோதிக்க ஒரு சுய பரிசோதனை

வெற்றியின் ஆணிவேர் தன்னம்பிக்கை. உங்களிடம் தன்னம்பிக்கை மிகுந்திருந்தால் நீங்களும் வெற்றியாளராக வலம் வரலாம். உங்கள் தன்னம்பிக்கையை சோதிக்க ஒரு சுய பரிசோதனை இங்கே
உங்கள் உடல்வாகு எப்படிப்பட்டது?
அ. எனது உடல் அழகான `ஸீரோ சைஸ்’ கொண்டது. அதில் எனக்கு திருப்திதான்!
ஆ. மேனியழகு பொலிவாகத்தான் இருக்கிறது. இன்னும் வசீகரிக்கும் தோற்றமுடன் எனது உடலை வைத்துக்கொள்ள விரும்புகிறேன்.
இ. மக்கள் நான் வசீகரிக்கும் வனப்புடன் தோன்றுவதாகக் கூறுகின்றனர். ஆனால் நான் அப்படி நினைப்பதில்லை!
நீங்கள் வெகுநாள் விரும்பிய முக்கிய மனிதரை எதிர்பாராத விதமாக சந்திக்கிறீர்கள்? அப்போது…
அ. நானே முதலில் பேச்சைத் தொடங்கி அவருக்கும், எனக்கும் இடையே பரஸ்பர கருத்தொற்றுமை இருக்கிறதா? என்பதைக் கண்டறிவேன்.
ஆ. பார்த்ததும் ஏற்கனவே அறிமுகமானவர் மாதிரி அரட்டையடிக்கத் தொடங்கிவிடுவேன்..!
இ. அவர் என்னிடம் முதலில் பேச மாட்டாரா? என்று காத்திருப்பேன்!
சொந்தபந்தங்களுடன் உறவை பேணுவதில் நீங்கள் எப்படி?
அ. எப்போதாவது கருத்துவேறுபாடு ஏற்பட்டு உறவில் விரிசல் விழுவதுபோல தோன்றினால் நான் என் நிலையை ஆய்வு செய்து தவறுகள் இருந்தால் அதற்காக மன்னிப்புக் கோரி உறவு முறையை மேம்படுத்த முயற்சிப்பேன்.
ஆ. உறவுமுறை நன்றாகவே இருக்கிறது..! ஆனாலும் சில பிரச்சினைகள் வந்து போகின்றன.
இ. உறவுகள் என்றாலே தொல்லையும் துயரமும்தான்..! அவர்கள் என்னை புரிந்து நடந்து கொள்ளவே மாட்டார்கள்!
உங்கள் முகத்தில் திடீரென்று முகப்பரு தோன்றினால் என்ன செய்வீர்கள்..?
அ. முகப்பரு மருந்து தடவுவேன். இன்றைய முகப்பரு நாளைக்கு மறைந்துவிடும் என்கிற நம்பிக்கையோடு அடுத்த வேலையில் கவனம் செலுத்துவேன்.!
ஆ. முகப்பருவைக் கண்டதும் உடனே நல்ல டாக்டரை நாடி செல்வேன். டாக்டரிடம் செல்வதை தள்ளிப்போட மாட்டேன்.
இ. எனக்கு உடம்பு சரியில்லை என்று கூறிவிட்டு, அன்றைய அலுவலை ஒத்திப்போட்டுவிட்டு கவலையில் ஆழ்ந்து விடுவேன்!
நெருங்கிய நண்பர் ஒருவர் எதிர்பாராத துன்பத்தில் மாட்டிக்கொண்டால்…?
அ. முதல்ஆளாக ஓடிப்போய் அவருக்கு உதவி செய்வேன்..!
ஆ. அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு என்ன தேவைப்படுகிறது என்பதைக் கேட்டறிந்து உதவி செய்வேன்!
இ. உதவி செய்ய எனக்குத் தெரிந்த இன்னொரு நண்பரை அனுப்பி வைப்பேன்..!
உங்களது வாழ்க்கை எப்படி செல்கிறது?
அ. எனக்கு உண்மையான நண்பர்கள் அதிகம். அதனால் வாழ்க்கை ஆனந்தமாய் கழிகிறது..!
ஆ. ஏதோ இருக்கிறேன். நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால் அங்கங்கே தனித்தனியாக இருக்கிறார்கள். எனக்கு ஏற்படும் கஷ்டநஷ்டத்தை கண்டுகொள்ள ஆளில்லை.
இ. இது என்ன வாழ்க்கை. ஒரு சந்தோஷமும் இல்லை. வாழ்க்கையே வெறிச்சோடிப் போய்க் கிடக்கிறது!
ஒரு குழுவை வழிநடத்தும் தலைவராக உங்களை தேர்வு செய்தால்…?
அ. உடனடியாக ஒத்துக்கொள்வேன்!
ஆ. நான் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று கேட்டறிவேன். அதன்பிறகு தலைமை தாங்குவது பற்றி முடிவு செய்வேன்.
இ. நான் என்ன செய்வது என்று அறியாமல் தவிப்பேன். தலைமை தாங்க யோசிப்பேன்!
உங்கள் பஸ் பயணம் திடீரென்று ரத்தாகிறது, தனியார் பஸ் நிறுவனம் அதற்கு மாற்று ஏற்பாடு செய்யவில்லை, பணத்தையும் திருப்பித் தரவில்லை. என்ன செய்வீர்கள்…?
அ. கம்பெனி மேலாளரை சந்தித்து, இழப்பீடு தர வற்புறுத்துவேன்.
ஆ. என் கோரிக்கையை அமைதியாகத் திரும்பத் திரும்ப எடுத்துரைப்பேன்!
இ. திரும்ப திரும்ப கேட்பதால் பயனில்லையென்று கருதி, இன்னொரு பஸ்சில் ஏறி வீட்டிற்கு போய்விடுவேன்.
உங்கள் பதில்களில் `அ’ விடைகள் அதிகமாக இருந்தால் நீங்கள் தன்னம்பிக்கை மிகுந்தவர்தான். எந்தச் சூழ்நிலையையும் சமாளிக்கும் வல்லமை உங்களுக்கு உண்டு! எப்படிப்பட்ட சூழ்நிலையையும் உங்களுக்குச் சாதகமாக்கி நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்.
அதிக கேள்விகளுக்கு விடை ஆ-வை தேர்வு செய்திருந்தால் நீங்கள் எதுவும் நல்லதாகவே நடக்கும் என்று நம்புவீர்கள். சிறிது சஞ்சலங்கள் தோன்றினாலும் சூழ்நிலையை சமாளிக்கும் வல்லமை உங்களிடம் இருக்கும்.
பதில் `இ’ உங்கள் விடைகளில் மிகுந்திருந்தால் நீங்கள் நம்பிக்கை குறைவானவர். உங்கள் வாழ்வியல் முறைகளை சீர்திருத்துவதோடு மன தைரியத்துடன் செயல்படத் தொடங்குங்கள்.